தேர்தல் ஆணையர் தேர்வில் மின்னல் வேகம் ஏன்? - உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

author img

By

Published : Nov 25, 2022, 2:02 PM IST

உச்ச நீதிமன்றம்

இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயல் நியமனத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயல் கடந்த திங்கட்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் கடந்த 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வு பெற்ற மறுநாளே இந்திய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையருக்கான பதவி கடந்த மே 15ஆம் தேதி முதல் காலியாக இருந்த நிலையில், அருண் கோயல் ஓய்வு பெற்ற மறுநாளே நியமனம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனத்தில் ஏன் மின்னல் வேகம்? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையர் தேர்வு நடைபெற்றது என வினவிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அருண் கோயலின் திறமை குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றனர். தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து அருண் கோயல் நியமனத்தில் முறைகேடுகள் இல்லை என மத்திய அரசு தரப்பில் ஆவணங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் மனுவை மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த மே மாதம் முதலே இந்திய தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், 24 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் அருண் கோயல் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கான காரணம் என்ன என வினவினர்.

மேலும், மத்திய அரசின் செயலாளராக இருந்த அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்றவுடனே தேர்தல் ஆணையர் தேர்வில் இணைந்தது எப்படி, எந்த செயல்முறையின் அடிப்படையில் மற்ற நான்கு பேரின் பெயரை சட்டத்துறை அமைச்சர் பரிந்துரை செய்தார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்திய தேர்தல் ஆணையர் தேர்வுக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்கிறார். அதே நாளில் குடியரசுத் தலைவரும் 5 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலில் இருந்து அருண் கோயலை தேர்வு செய்து உத்தரவிட்டது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வாதத்தின் இடையே குறுக்கிட்ட மத்திய அரசின் அட்டர்னி ஜென்ரல் வெங்கடரமணி, எதிர்தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனை நோக்கி "நீங்கள் சற்று நேரம் வாயை மூடிக் கொண்டு முழு பிரச்சினையையும் உற்று கவனிக்குமாறு" கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு எதன் அடிப்படையில் சட்ட அமைச்சர் 4 நபர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரைத்தார் என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், பணியாளர் மற்றும் அவர்களுக்கான பயிற்சி துறையின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தேர்வு நடைபெற்றதாக கூறினார். தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறவில்லை என்றும் இனி தேர்வு முறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நான் தான் டெங்கு; உனக்கு ஊதுவேன் சங்கு' கொசு வேடத்தில் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.