இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - பிரதமர் மோடி அறிவித்த ஆக்‌ஷன் பிளான்!

author img

By

Published : May 22, 2023, 2:32 PM IST

PM Modi

பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், 12 படிநிலைகள் கொண்ட செயல்திட்டத்தை அறிவித்தார்.

பப்புவா நியூ கினியா: ஜி7 உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில், பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று(மே.21) பப்புவா நியூ கினியா சென்றடைந்தார். அங்கு நடைபெறவுள்ள இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் சென்றார். பப்புவா நியூ கினியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை போர்ட் மோர்ஸ்பி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப், மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் நேற்று இணையத்தில் வைரலாகின.

இந்த நிலையில், இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் மூன்றாவது உச்சி மாநாடு இன்று(மே.22) பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் நடைபெற்றது. இதனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர்.

இந்த மாநாட்டில், இந்திய - பசிபிக் தீவு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, சுகாதாரம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பசிபிக் தீவு நாடுகளுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், 12 படிநிலைகள் கொண்ட செயல்திட்டத்தை அறிவித்தார். அதில், பிஜியில் 100 படுக்கைகள் கொண்ட புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் திறப்பது, பப்புவா நியூ கினியாவில் பிராந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி மையத்தை அமைப்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாகர் அம்ருத் உதவித்தொகைத் திட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை வழங்குவது, அரசு கட்டிடங்களுக்கு சூரிய ஒளி மின் திட்டம், கடல் ஆம்புலன்ஸ் சேவை, டயாலிசிஸ் அலகுகள் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி மையம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த செயல் திட்டங்கள், பசிபிக் பிராந்திய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் என்றும், பசிபிக் தீவு நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

உச்சி மாநாட்டிற்குப் பிறகு, பிரதமர் மோடி, பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா, மார்ஷல் தீவுகள் அமைச்சர் கிட்லாங் கபுவா மற்றும் பல இந்தோ-பசிபிக் நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதையும் படிங்க: தோக் பிசின் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு... பிரதமர் மோடி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.