ETV Bharat / bharat

HBD பவன் கல்யாண் - ஆந்திர அரசியலின் தவிர்க்க முடியாத அத்தியாயம்

author img

By

Published : Sep 2, 2021, 7:26 AM IST

Updated : Sep 2, 2021, 8:54 AM IST

ஒன்றிய அரசோ மாநில அரசோ தவறு செய்தால் உடனடியாக குரல் எழுப்புவது என ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் ஒரு பவர் ஸ்டாராக வலம்வருகிறார். முக்கியமாக பெரியார், அம்பேத்கரை தனக்கு பிடித்த இரண்டு போராளிகள் என்று குறிப்பிடுகிறார் பவன் கல்யாண்.

pawan kalyan
pawan kalyan

தெலுங்கு திரையுலகில் முக்கிய கதாநாயகர்களில் பவர் ஸ்டார் பவன் கல்யாணும் ஒருவர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர். தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வரும் இவர் 2008ஆம் ஆண்டு சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கினார்.

ஆனால், சிரஞ்சீவி திடீரென கட்சியை காங்கிரஸோடு இணைத்ததால் அரசியலிலிருந்து கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தவர் 2014ஆம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார்.

pawan kalyan

தீவிர அரசியல்

ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டதால் ஆந்திர அரசியலில் தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டுமென தீவிரமாக களமாடினார். அதன்படி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார்.

பவன் கல்யாணுக்கு பெரிய ரசிகர் படை இருந்ததால் ஆந்திர அரசியலில் பெரும்பாலான கட்சிகள் பவனின் ஆதரவை எதிர்பார்த்தன. அவரது கட்சியான ஜனசேனாவும் நல்லது செய்ய வேண்டும் என்ற நிபந்தனையோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்தது.

ஆதரவு மட்டும்

அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டதால் பவன் களமிறங்குவார் என கருதப்பட்ட நிலையில் கட்சியை வலுவாக கட்டமைப்பது அவசியம் என்பதை உணர்ந்து ஆதரவு அளித்ததோடு நிறுத்திக்கொண்டார்.

அதேசமயம் அவர் பரப்புரைக்கு சென்றபோதெல்லாம் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாட்டில் எப்படி விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது கூடிய கூட்டம் அனைவரையும் பிரமிக்க வைத்ததோ அதே பிரமிப்பு ஆந்திராவிலும் எழுந்தது.

கூட்டத்தால் மட்டுமின்றி அவரது செயல்பாடுகளாலும் ஆந்திர மக்கள் பிரமித்தனர். விசாகப்பட்டினம் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தனியார்மயம் ஆக்கப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தொழிலாளி உயிரிழக்க களத்தில் இறங்கி போராடினார் பவன்.

pawan kalyan

விசாகப்பட்டினத்தில் போராட்டம் நடந்த சமயத்தில், பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் பழனிசாமி சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கக் கூடாது என கடிதம் அளித்தார்.

இந்தச் சூழலில், விசாகப்பட்டினம் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனியார்மயம் ஆக்கக்கூடாது என பிரதமரை சந்தித்து பவன் வலியுறுத்தினார்.

அப்போது சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு அளித்த கடிதம் குறித்து பவனுக்கு தெரியவந்தது.

அதனையடுத்து, ’தமிழ்நாடு வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார்.

தனது மாநிலத்திற்கு மட்டுமில்லாமல் பிற மாநிலத்தின் நியாயமான கோரிக்கையையும் கவனத்தில் கொண்ட பவன் கல்யாணின் பண்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

முதலமைச்சருக்கு வாழ்த்து

சமீபத்தில்கூட, “அன்புக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது.

அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டியிருந்தார்.

நியாயமான கோரிக்கைகளுக்கு செவி கொடுப்பது, அடுத்த மாநிலத்தில் நடக்கும் நல்லவைகளுக்கு பாராட்டு தெரிவித்து, ஒன்றிய அரசோ மாநில அரசோ தவறு செய்தால் உடனடியாக குரல் எழுப்புவது என ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் பளிச் முத்திரை.

பெரியாரும் அம்பேத்கரும் போராளிகள்

முக்கியமாக பெரியார், அம்பேத்கரை தனக்கு பிடித்த இரண்டு போராளிகள் என்று குறிப்பிடுகிறார் பவன் கல்யாண். 2019ஆம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பவனே கூட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

pawan kalyan

அண்ணன் ஆரம்பித்த கட்சியிலும் ஏமாற்றம், ஆதரவு அளித்த கட்சியிலும் ஏமாற்றம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2019 தேர்தலிலும் ஏமாற்றம் என தொடர்ந்து சங்கடங்களை சந்தித்த பவன் கல்யாண் இந்த தோல்விக்கு பிறகு ஆந்திர அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்றே பலரும் கருதினர்.

ஆனால் தோல்விக்கு பிறகு அவர் கூறிய வார்த்தைகள், “புதிய அலை அரசியல் என்ற கருத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வந்தேன். என் அரசியல் பயணம் அதே தடத்தில் மீண்டும் தொடரும்”. ஆம், தோல்விகளும், ஏமாற்றங்களும் துரத்தினாலும் ஆந்திர அரசியலில் பவன் கல்யாண் ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம்.

Last Updated :Sep 2, 2021, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.