காதலுக்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாக்., இளம்பெண் கைது!

காதலுக்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாக்., இளம்பெண் கைது!
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, பெங்களூருவில் காதலனுடன் வசித்து வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இளம்பெண்ணை வரவழைத்த அவரது காதலனும் கைதானார்.
பெங்களூரு: பாகிஸ்தானைச் சேர்ந்த இக்ரா(19) என்ற இளம்பெண்ணும், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முலாயம் சிங்(26) என்ற இளைஞரும் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்துள்ளனர்.
பிறகு இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்ரா, காத்மாண்டு வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் பெங்களூரில் தொழிலாளர் குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர்.
இதனிடையே இக்ரா பாகிஸ்தானில் உள்ள தனது தாயை தொடர்புகொள்ள முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனை கண்டறிந்த மத்திய உளவுத்துறை பெங்களூரு போலீசாருக்கு தகவல் அனுப்பியது. அதன்படி, விசாரணை மேற்கொண்ட போலீசார், இக்ராவின் இருப்பிடத்தை கண்டறிந்தனர். பின்னர் இக்ராவை கைது செய்து வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தில் (FRO) ஒப்படைத்தனர். முலாயம் சிங்கையும் கைது செய்தனர்.
இளம்பெண் இக்ராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனது பெயரை ரவா யாதவ் என மாற்றி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து எஃப்ஆர்ஓ அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ: பிரீ வெட்டிங் போட்டோ ஷூட்.. படகோட்டியின் போஸ் அட்வைஸ்..
