ETV Bharat / bharat

"உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை ஒடுக்க முயற்சித்துவருகிறது"

author img

By

Published : Sep 4, 2022, 7:46 AM IST

உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சித்துவருகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

Amit Shah
Amit Shah

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (செப். 3) நடைபெற்ற 30ஆவது தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளின் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், லட்சத்தீவுகளின் நிர்வாகிகள், தென் மண்டல கவுன்சில் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், மத்திய உள்துறைச் செயலர், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் செயலர், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் அமித் ஷா, "தென்னிந்தியாவின் மீது பிரதமருக்கு சிறப்புப் பற்று உள்ளது. அதனால்தான் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு, சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார். இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இவ்வாறு கடலோர மாநிலங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ. 2,00,000 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 7,737 கோடி ரூபாய் செலவில் நீலப் புரட்சிக்காக பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா செயல்படுத்தப்படுகிறது.

2015ஆம் ஆண்டு முதல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் போதைப்பொருள் பிரச்சனையை மிகக் கண்டிப்புடன் ஒடுக்க முயற்சித்துவருகிறது. 12 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்களுக்கு கியூஆர் கோட் பிவிசி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலோர மாநில மீனவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பது மட்டுமின்றி கடலோர பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். தடய அறிவியல் ஆய்வகங்கள் அமைப்பதற்கான கொள்கை தயாரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தண்டனை விகிதம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு ஐந்து கிலோமீட்டருக்கும் ஒரு வங்கிக் கிளை வேண்டும் என்பதே மோடி அரசின் இலக்காகும். இதற்காக தென் மண்டல கவுன்சில் உறுப்பு மாநிலங்கள் தங்கள் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஐந்து கிலோமீட்டருக்குள் வங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும். வங்கி கிளைகளை திறக்க வேண்டும். இது அரசின் திட்டங்களின் பலன்களை நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க உதவும்.

இந்த தென் மண்டல கவுன்சிலின் 30ஆவது கூட்டத்தில் 26 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது. 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அந்த மாநிலங்கள் தங்களுக்குள் தீர்த்து கொள்ள வேண்டும். இது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மை பயக்கும். கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐஐடிக்கள் தேசத்தின் பெருமை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.