ETV Bharat / bharat

மேகேதாட்டு அணை விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்

author img

By

Published : Jul 3, 2021, 4:12 PM IST

Updated : Jul 3, 2021, 5:48 PM IST

மேகேதாட்டு அணை
மேகேதாட்டு அணை

16:08 July 03

Yediyurappa
எடியூரப்பா எழுதிய கடிதம்

கர்நாடகா: மேகேதாட்டு அணை கட்டுவது தமிழ்நாட்டை பாதிக்காது என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில், கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  

கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும், தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம், மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.  

அணை கட்டுவதற்கு எந்தவித தொடக்கப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இக்கூட்டத்தில் மேகேதாட்டு அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும் என்றும், அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் தங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

மேகேதாட்டு அணை கட்டுவது தமிழ்நாட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும், பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மேகேதாட்டு திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்காது என நம்புகிறோம். 

மேலும், மேகேதாட்டு அணை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இரு மாநிலங்களுக்கிடையில் சிறந்த உறவை வளர்ப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மேகேதாட்டு அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இத்திட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2015இல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அத்தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

அண்மையில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன்.  

ஆனால், எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே:மேகதாதுவில் அணைக் கட்டக் கூடாது- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

Last Updated :Jul 3, 2021, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.