"தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நெருக்கடி தருகிறார்கள்" - ராஜினாமா செய்த ஐபிஎஸ் குற்றச்சாட்டு!

author img

By

Published : May 13, 2022, 10:06 PM IST

IPS RESIGNS

உயரதிகாரிகள் சாதிய ரீதியாக துன்புறுத்துவதாகக்கூறி, ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இவர் 4-வது முறையாக ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.

கர்நாடகா: கர்நாடகாவில் காவல்துறை பயிற்சி பிரிவு டிஜிபியாக பணியாற்றிய புட்டபாகா ரவீந்திரநாத், உயர் அதிகாரிகள் சாதிய ரீதியாக துன்புறுத்துவதாகக் கூறி ராஜினாமா செய்தார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை கர்நாடகத் தலைமை செயலரிடம் கடந்த 10-ம் தேதி வழங்கினார். ஐபிஎஸ் அதிகாரியின் ராஜினாமா பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது இந்த குற்றச்சாட்டு குறித்து விரிவாக அறிவதற்காக ஈடிவி பாரத் செய்தியாளர்கள் அவரைத் தொடர்பு கொண்டனர்.

அப்போது அவர் பல அதிர்ச்சி தரும் உண்மைகளை தெரிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர், "ரவீந்திரநாத் ஐபிஎஸ் என்ற பெயர் கர்நாடகாவில் நன்கு அறியப்பட்ட பெயர். பணியில் இருந்தபோது பல முக்கியப் பணிகளை செய்துள்ளேன். அதற்காக குடியரசுத் தலைவரின் கேலண்ட்ரி (Gallantry)விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டேன். நான் நேர்மையாக இருந்ததால் உயர் அதிகாரிகள் அதிக அழுத்தம் கொடுத்தார்கள்.

காரணமின்றி இடமாற்றம் செய்வது, பதவி உயர்வுகளை நிறுத்துவது உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்தேன். இருந்தும் இடைவிடாமல் மக்களுக்குப் பணி செய்தேன். கடந்த 2008-ம் ஆண்டு உயரதிகாரிகள் மரியாதை குறைவாக நடத்திய‌தால் ராஜினாமா செய்தேன். அவர்களது அட்டூழியங்கள் வெளியே வந்ததால், மீண்டும் பணிக்கு திரும்பினேன். 2014-ம் ஆண்டு எனது பதவி உயர்வை தடுப்பதற்காக என் மீது பொய் புகார் அளித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ராஜினாமா செய்தேன். பின்னர் அது பொய் வழக்கு என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் பணிக்குத் திரும்பினேன். கடந்த 2020-ம் ஆண்டு என்னை விட குறைவான அனுபவம் உள்ளவர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கியதால், ராஜினாமா செய்தேன். அதன் எதிரொலியாக எனக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு முன், சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக டிஜிபியாக நியமிக்கப்பட்டேன். அப்போது, கர்நாடக மாநிலம் முழுவதும் பட்டியலின மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான விதிகளை அமல்படுத்தினோம். மாநிலத்தில் சிலர் போலியான எஸ்சி-எஸ்டி சான்றிதழ்களை பெற்று, உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். அதனைக் கண்டறிந்து, அரசியல்வாதிகளின் வாரிசுகள் உள்ளிட்டப் பலர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தேன். இதனால் என்னை காவல்துறை பயிற்சிப் பிரிவுக்கு மாற்றினர்.

டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்ற நான்கு மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அதிருப்தி அடைந்து, ராஜினாமா செய்தேன். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், எனக்கு இதுபோன்ற நெருக்கடிகளைத் தருகிறார்கள். நான் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறேன். எனது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால் மருத்துவராக சேவையாற்றுவேன். எனது சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்வேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பவாரியா கும்பல் தெரியும்; உ.பி.போலீஸுக்கே 'ஜூ' காட்டிய இரானி கும்பல் பற்றி தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.