தெலங்கானா தொழில்துறை அமைச்சர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

author img

By

Published : Nov 23, 2022, 10:29 AM IST

தெலங்கானா தொழில்துறை அமைச்சர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை

ஐதராபாத்தில் உள்ள தெலங்கானா தொழில்துறை அமைச்சர் மல்லா ரெட்டி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் ஒருபுறம் வருமான வரித்துறை தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. மறுபுறம் எம்.எல்.ஏ.,க்களை தாக்கிய வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, கேசினோ, டில்லி மதுபான ஊழல் வழக்குகளில் அமலாக்கத்துறை விசாரணை என, பல்வேறு சோதனைகளால் மாநில அரசியல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தெலங்கானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாரெட்டியின் வீடு, கல்லூரி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பார்ட்னர்கள் என வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் தேடத் தொடங்கினர்.

ரூ.5 கோடி ரொக்கம், ஆவணங்கள், சொத்து விவரங்கள், ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கதவை திறக்க மறுத்ததால், அதிகாரிகள் ஒரு கட்டத்தில் பூட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்றொரு இடத்தில் லாக்கரை திறக்க மறுத்ததால், நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதை திறந்துள்ளனர்.

மல்லாரெட்டி வீட்டில் அதிகாரிகளுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. ED மற்றும் IT தாக்குதல்கள் போன்ற பாஜகவின் அறைகூவல்களுக்கு பயப்பட மாட்டோம் என்று அமைச்சர்கள் தலசானி, மகமூத் அலி, ஸ்ரீனிவாஸ் கவுட், கொப்புல ஈஸ்வர் ஆகியோர் கூறியுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைக்கு பல எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை முதல் ஐடி சோதனை: நியூ போயின்பள்ளி ஜெயநகர் காலனியில் உள்ள மல்லாரெட்டியின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது சகோதரர் கோபால் ரெட்டி, அருகில் உள்ள சௌஜன்யா காலனியில் வசிக்கும் அமைச்சர் மர்ரி ராஜசேகர் ரெட்டியின் மருமகன், சீதராமபுரத்தில் வசிக்கும் தொழில் பங்குதாரர் நரசிம்மயாதவ், சின்னத்தோட்டத்தில் வசிக்கும் சிட்பண்ட் வர்த்தகர் கங்காதர் யாதவ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வெளிநாட்டு பயணத்தில் இருந்த மர்ரி ராஜசேகர் ரெட்டியை தவிர மற்ற அனைவரும் சோதனையின் போது வீட்டில் இருந்தனர்.

அமைச்சரின் அலுவலக பால்கனியில் கண்டெடுக்கப்பட்ட பையில் செல்போன் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து அது யாருடையது என விசாரித்ததாக தெரிகிறது. அமைச்சர் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள அவரது சகோதரர் கோபால் ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. குப்பைத் தொட்டிகளைக் கூட விட்டு வைக்காமல் தேடினார்கள். அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் இருந்த லாக்கர், அலமாரிகளில் சாவி இல்லாததை அறிந்த அதிகாரிகள், செகந்திராபாத்தில் இருந்து பூட்டு திறக்கும் தொழிலாளியை வரவழைத்து திறந்து பார்த்தனர்.

2 கோடி ரூபாய் பறிமுதல்: கொம்பள்ளி நகராட்சி பகுதியில் வசிக்கும் மல்லாரெட்டி மகன் மகேந்தர் ரெட்டி, அருகில் வசிக்கும் மற்றொரு மகன் பத்ரா ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். மல்லாரெட்டி மருத்துவக் கல்லூரியின் இயக்குநராக பத்ரா ரெட்டியும், பொறியியல் கல்லூரியின் இயக்குநராக மகேந்திர ரெட்டியும் உள்ளனர். மல்லாரெட்டியின் உறவினரும், மைசம்மகுடாவில் உள்ள நரசிம்ம ரெட்டி பொறியியல் கல்லூரியின் இயக்குநருமான திரிசூல் ரெட்டி, ஜீடிமெட்லாவில் உள்ள பீமா பிரைட் சமூகத்தில் வசிக்கிறார். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. நம்பகமான தகவலின்படி இங்கு ரூ.2 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கதவை உடைக்க முயற்சி: அமைச்சரின் நெருங்கிய உறவினரான சந்தோஷ் ரெட்டி, கொம்பள்ளியில் உள்ள பொப்பிலி எம்பயர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். காலையில் சோதனைக்கு வந்த அதிகாரிகளை அடையாளம் கண்டுகொண்ட சந்தோஷ் ரெட்டியின் குடும்பத்தினர், மதியம் 1 மணி வரை வீட்டை உள்ளே இருந்து பூட்டிவிட்டு வெளியே வரவில்லை. அதிகாரிகள் கதவை உடைப்பதற்கான முயற்சியில் இறங்கிய பின் கதவை திறந்தனர். இதையடுத்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

செவ்வாய்கிழமை மாலை மல்லாரெட்டியின் அக்கா மகன் பிரவீன் ரெட்டி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவர் துலாப்பள்ளியில் உள்ள அசோகா ஆலா மைசன் கேட்டட் குடியிருப்பில் வில்லா எண். 135 இல் வசிக்கிறார். தற்போது அவர் மல்லாரெட்டி கல்லூரி விவகாரங்களை நிர்வகித்து வருகிறார். இந்த வில்லா மல்லாரெட்டியின் மகன் பத்ரா ரெட்டியின் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது.

கல்லூரி, மருத்துவமனையில் சோதனை: மல்லாரெட்டிக்கு சொந்தமான 2 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 பல் மருத்துவக் கல்லூரிகள், மல்லாரெட்டி மற்றும் நாராயண மல்லாரெட்டி மருத்துவமனைகளில் காலை முதல் இரவு வரை ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நிர்வாகத் துறையின் வருமான வரி விவகாரங்கள் மற்றும் மருத்துவ இடங்கள் குறித்த விவரங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாவது நாளாக தொடரும் சோதனை: கல்லூரி இயக்குனர் பத்ரா ரெட்டி அலுவலகங்களில் பத்து அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டது. குண்டலபோச்சம்பள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட மைசம்மகுடாவில் உள்ள மல்லாரெட்டி பல்கலைக்கழகத்துடன், மல்லாரெட்டி சிஎம்ஆர் கல்லூரியில் காலை மாணவர்கள் வருவதற்கு முன்பே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். கல்லூரிகளின் கணக்குகள், நிர்வாகத் துறை மற்றும் ஆய்வகங்களில் முக்கிய ஆவணங்களுடன் கணினி ஹார்டு டிஸ்க்குகள் ஆய்வு செய்யப்பட்டன.

கிராந்தி கூட்டுறவு அர்பன் வங்கியின் தலைவர் பி.ராஜேஸ்வர ராவ் குப்தா வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாலாநகர் ராஜு காலனியில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிகாலையில் அதிகாரிகள் குழுவினர் வந்து ஆவணங்களை ஆய்வு செய்தனர். கிராந்தி வங்கியில் இருந்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பணம் திருப்பி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ராஜேஷ்வர் ராவ் குப்தா மல்லாரெட்டிக்கு சொந்தமான பல வணிக நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். துண்டிக்கலில் உள்ள ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் கல்லூரியின் இயக்குனராகவும் உள்ளார்.

இந்தச் சோதனையின் போது சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் மல்லாரெட்டிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். அமைச்சர் வீட்டில் இருந்து வெளியே வந்து அவர்களுக்கு வெற்றிச் சின்னம் காட்டியது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மல்லாரெட்டியின் மகளும், மர்ரி லக்ஷ்மர் ரெட்டியின் கல்வி நிறுவனங்களின் இயக்குநருமான ஸ்ரேயா ரெட்டியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

இதையும் படிங்க: பொது வினியோக திட்டத்திற்கு பொருள் வழங்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.