75 Rupees Coin: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி 75 ரூபாய் நாணயம் அறிமுகம்!

author img

By

Published : May 26, 2023, 1:19 PM IST

75 Rupee

நாளை மறுநாள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த விழாவை நினைவுகூரும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் புதிய நாடாளுமன்றத்தின் படம் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் நான்கு மாடிகளுடன், 1,224 எம்பிக்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 970 கோடி ரூபாய் செலவில் இந்த கட்டடிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான அரசியல் சாசன அரங்கம், வாகனங்களுக்கான பார்க்கிங், கேன்டீன் உள்ளிட்டவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்கிறார்.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இந்திய குடியரசுத் தலைவர்தான் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டதால், இந்தத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களது முடிவை மறுபரீசிலனை செய்து, நாட்டு மக்களுக்காக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நாடு சுதந்திரம் பெற்றபோது ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில் நேருவிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆதீனம் குழுவும் டெல்லி சென்றுள்ளது. இது போன்ற பல்வேறு நிகழ்வுகளால் புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சி நாடு முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், வரும் 28ஆம் தேதியன்று 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 75 ரூபாய் நாணயத்தின் முகப்பில் அசோகா சின்னமும், அதன் கீழே 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்து முறையில் 'பாரத்' என்ற சொல் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும், நாணயத்தின் பின்புறத்தில் புதிய நாடாளுமன்றத்தின் படமும், அதன் கீழே Parliament Complex என்று ஆங்கிலத்திலும், மேலே 'சன்சாத் சங்குல்' என தேவநாகரி எழுத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் படத்திற்கு கீழே "2023" ஆண்டு பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 ரூபாய் நாணயம், 35 கிராம் எடையும், 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவிலும் இருக்கும் என்றும், நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் கலந்து உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களை அவமதித்தாரா பிரதமர் மோடி? ஆதிவாசி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.