போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!
Published: Nov 29, 2022, 11:34 AM


போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!
Published: Nov 29, 2022, 11:34 AM
போலி திருமண தளங்கள் மூலம் இளைஞர்களிடம் இருந்து அதிகளவிலான பணத்தை நூதனமாக சில இளம்பெண்கள் வசூலிப்பது தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத் (தெலங்கானா): உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் போலி திருமண தளங்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த தளம் பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத நபர்கள் மற்றும் திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்களை குறி வைத்து இயங்குகிறது.
இதில் டெலிகாலராக அறிமுகமாகும் பெண்களே, மணமகளாக பேசத் தொடங்குகின்றனர். பின்னர் ஏதேனும் ஒரு பூங்கா அல்லது காபி கிளப்களில் திருமணம் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமணம் செய்த நபரிடம் இருந்து தேவையான அளவில் பணம் மற்றும் பொருட்கள் பெறப்படுகிறது.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து, இல்லற வாழ்வில் உடன்பாடு இல்லை என்பதுபோல் கூறி விலகி விடுகின்றனர். அவ்வாறு விலக மறுக்கும் நபர்களை, பாலியல் வன்புணர்வு புகார் கொடுத்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுக்கின்றனர். இவ்வாறு தான் போலி திருமண தளங்கள் மூலம் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் சைபர் கிரைம் ஏசிபி கேவிஎம் பிரசாத் கூறுகையில், “குகட்பல்லி பகுதியில் ஒன்றரை லட்சம் ரூபாயை இழந்த ஒரு நபரால் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில்தான், இந்த சைபர் குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாரேனும் போலி திருமண தளங்கள் மூலம் பாதிக்கப்பட்டால் காவல் துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனிப்பட தகவல்கள் மற்றும் தெரியாத நபருடன் பணப்பரிமாற்றம் செய்யும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சமூக வலைத்தளவாசிகள் உஷார்.. அவதூறு போஸ்டுகளை விசாரிக்க தனிப்பிரிவு!
