மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு! வனத்திற்குள் சென்ற போது மின்வயர் உரசி பரிதாபம்!

மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு! வனத்திற்குள் சென்ற போது மின்வயர் உரசி பரிதாபம்!
Five elephants died electrocution in Musabani forest jharkhand : ஜார்கண்டில் மின்சாரம் தாக்கி 3 குட்டி உள்பட 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் முசாபானி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுரங்கப் பணிகளுக்கான இந்துஸ்தான் காப்பர் லிமிடட் நிறுவனம் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சார கேபில்களை அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முசாபானி வனப்பகுதியை ஒட்டிய உப்பர்பந்தா வனத்திற்குள் 12 யானைகள் சென்று கொண்டு இருந்த நிலையில், மின்சார கேபில் உரசி 3 குட்டி யானை உள்பட 5 யானைகள் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஏறத்தாழ 33 ஆயிரம் வோல்ட் மின்சாரம் 5 யானைகளின் உடலில் பாய்ந்து துடிதுடித்து இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த திங்கட்கிழமை (நவ. 20) இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் இன்று (நவ. 21) இது தொடர்பாக கிராம மக்கள் அளித்த புகாரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் மின்னழுத்த வயர்கள் காரணமாகத் தான் யானைகள் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்து உள்ள வனத்துறையினர், உடற்கூராய்வு நடத்தி அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறினர். நாளை (நவ. 22) உயிரிழந்த 3 குட்டிகள் உள்பட 5 யானைகளின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உயர் மின்னழுத்த கேபில் உரசி 3 குட்டி உள்பட 5 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 12 யானைகள் வனத்திற்குள் சென்றதாக கூறப்பட்ட நிலையில், உயிர் பிழைத்த மீதமுள்ள 7 யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
