சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கைது - அமலாக்கத்துறை அதிரடி!

author img

By

Published : Jul 31, 2022, 7:07 PM IST

ED

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு பகுதியை மாற்றியமைப்பதில், சுமார் ஒரு கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் பல கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கடந்த 28ஆம் தேதியும் ஆஜராக ராவத்துக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இருப்பதை காரணம் காட்டிய சஞ்சய் ராவத், தாமதமாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த நிலையில் இன்று(ஜூலை 31) காலை 7 மணி முதல் மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடைபெற்றது. பல மணி நேர விசாரணையைத் தொடர்ந்து, மாலையில் சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைதாகி செல்லும்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சஞ்சய் ராவத், போலியான ஆவணங்களை தயாரித்து தன்னை கைது செய்துள்ளார்கள் என்றும், சிவசேனாவை பலவீனப்படுத்தவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவித்தார். என்ன நடந்தாலும் தான் சிவசேனாவை விட்டு விலகப்போவது இல்லை என்றும் சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

முன்னதாக இன்று பிற்பகலில் கட்சித் தொண்டர்களுக்கு உரையாற்றிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்யக்கூடும் என்றும், சிவசேனாவை அழிக்க சதித்திட்டம் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:சமூக வலைதளங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.