இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் ஃபைன்

author img

By

Published : Jan 24, 2023, 8:11 PM IST

ஏர் இந்தியா

காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில், சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

டெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது ஆண் பயணி, சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவாகரம் குறித்து உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தியது.

முறையாக புகார் தெரிவிக்காதது, பிரச்னையை சரியாக கையாளாதது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏர் இந்தியாவை கடிந்து கொண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவிட்டது.

இந்த தடம் மறைவதற்குள்ளே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மற்றொரு விவகாரத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாரிசில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் காலியாக இருந்த பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில் இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது. சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பெண் பயணி இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாயை அபராதமாக விதித்து உத்தரவிட்டது.

பெண் பயணி மீதும், இருக்கையிலும் சிறுநீர் கழித்ததாக அடுத்தடுத்து இரு புகார்களில் சிக்கிய ஏர் இந்தியா விமான நிறுவனம் கடந்த இரு மாதங்களில் மட்டும் 40 லட்ச ரூபாய் வரை அபராதத் தொகையை செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் முடக்கம் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.