சூடுபிடிக்கும் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் - சோனியா காந்தியை சந்தித்த கெலாட்!

author img

By

Published : Sep 21, 2022, 7:09 PM IST

Cong

காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் அசோக் கெலாட் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் வலுவான தலைமை இல்லை என கட்சியின் மூத்தத் தலைவர்களே குற்றம் சாட்டினர். ராகுல் காந்தி மீண்டும் பதவியேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தலைமை மீது அதிருப்தியில் இருந்த, கபில் சிபல், குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 தலைவர்கள், சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அதன்பிறகும் பெரிய அளவுக்கு எந்தவித மாற்றங்களும் ஏற்படாததால் ஏராளமான தலைவர்கள் கட்சியிலிருந்து விலக ஆரம்பித்தனர். குலாம் நபி ஆசாத் அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கான தலைவர்களை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் உட்கட்சித்தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 24ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெறவுள்ளது.

ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என்று கட்சியில் உள்ள பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே கட்சித் தலைமை மீது அதிருப்தியிலிருக்கும் எம்.பி. சசி தரூர், சோனியா காந்தியை இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து, சசி தரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியானது. மறுபுறம் சோனியா காந்திக்கு ஆதரவாக இருக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனால் கட்சிக்குள் மறைமுகமாக இருந்துவந்த இருமுனைப்போட்டி இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ராகுல்காந்தி பாரத் ஜடோ யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், எம்.பி., சசி தரூர், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான மதுசூதன் மிஸ்திரியை இன்று(செப்.21) சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்வது குறித்து கேட்டறிந்தார். வாக்காளர் பட்டியல், தேர்தல் முகவர் மற்றும் வேட்புமனுத் தாக்கல் குறித்து சசி தரூர் விசாரித்ததாக மிஸ்திரி கூறினார். வரும் 24ஆம் தேதி சசி தரூர் வேட்பு மனுவை பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். ராகுல்காந்தி தலைவராக வேண்டும் என வலியுறுத்தி வந்த கெலாட், தற்போது தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி மீதான வாரிசு அரசியல் விமர்சனங்களை உடைத்தெறியும் முயற்சியாகவே, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவரை தலைவராக்க முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பாரத் ஜோடோ - சிறுமியின் காலணியை சரிசெய்த ராகுல்காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.