தேவனகிரி (கர்நாடகம்): சாலை அமைத்துக்கொடுத்தால் மட்டுமே திருமணம் என்று மனு அளித்த பெண்ணின் குரலுக்கு அரசு செவிமடுத்து, சாலை அமைத்துக்கொடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது, கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தேவனகிரி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிந்து (26). இவர் கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், "எங்கள் கிராமத்தில் மொத்தம் 40 குடும்பம் வசித்து வருகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எங்களுக்குச் சாலை வசதிகள் ஏற்படுத்தித்தரவில்லை. இதன் காரணமாக 7 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று, பேருந்தைப் பிடிக்கவேண்டியதாக உள்ளது.
எனவே, எங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்து தரும்வரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். இது எங்கள் மக்களின் பல ஆண்டு கனவு" என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான செய்தி நமது ஈடிவி பாரத் கர்நாடகா தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த செய்தியைக் கண்ட முதலமைச்சர், உடனடியாக பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சாலைப் போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இன்னும் சாலையில் தார் மட்டுமே போடவேண்டிய வேலைகள் நிலுவையில் உள்ளன.
முதல்முறையாக இன்று, ராம்பூர் மாவட்டத்திற்குள் பேருந்து நுழைந்தது. இதனைக் கொண்டாடும் விதமாகக் கிராம மக்கள் பேருந்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும், இதனை சாத்தியமாக்கிய பிந்துவை மனதார வாழ்த்தினர்.