Rahul Gandhi: "ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது" - சுப்பிரமணிய சுவாமி!

author img

By

Published : May 24, 2023, 3:28 PM IST

Rahul Gandhi

ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வாங்க தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது.

டெல்லி : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் டெல்லி நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். "நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்" என ராகுல் காந்தி பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ராகுல் காந்தியை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மேலும் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பை மேற்கொள்காட்டி மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்தது. மேலும் ராகுல் காந்தியின் மக்கள் பிரதிநிதி பதவி காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு இல்லம், தூதரக ரீதியிலான அந்தஸ்து கொண்ட பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டன.

இந்நிலையில், புதிதாக பாஸ்போர்ட் வாங்க தடையிலான சான்று கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நடுவர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. பெருநகர கூடுதல் தலைமை நீதிபதி வைபவ் மேதா மனுவை விசாரித்தார்.

ராகுல் காந்தி மீது எந்தவிதமான கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் இல்லை என்றும் புதிய பாஸ்போர்டுக்கு தேவையான தடையில்லா சான்று வழங்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு தடையில்லா சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் விசாரணை வளையத்தில் இருக்கும் நிலையில், புதிய பாஸ்போர்ட் வாங்க அவருக்கு தடையில்லா சான்று வழங்குவது முறையல்ல என சுப்பிரமணிய சுவாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மனுக்கு எதிரான மே. 26ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமி அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

ஜவஹர்லால் நேரு மற்றும் பிற சில சுதந்திர போராட்ட வீரர்களால் 1938ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை வெறும் 90 கோடி ரூபாய் கடனுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியதாகவும் அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வாங்க தடையில்லா சான்று வழங்கினால் இந்த வழக்கு விசாரணைக்கு இடையூறாக அமையும் என்று கூறி சுப்பிரமணிய சுவாமி தரப்பில் முறையிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Sengol: நாடாளுமன்றத்தை ஆளப்போகும் தமிழ்நாட்டு சைவச் செங்கோல்.. நேருவுக்கு செங்கோல் கிடைத்த கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.