வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்.. யூடியூபர் மணிஷ் காஷ்யப்புக்கு பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா ஆதரவு..

author img

By

Published : Mar 19, 2023, 7:18 PM IST

bjp

யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைது ஒரு சர்வாதிகார நடவடிக்கை என்றும், இந்த நடவடிக்கை பீகார் அரசு பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்றும் பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி: தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற சில வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பாக திருப்பூரில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியாகின.

இந்த வீடியோக்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதுபோன்ற வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்தது. தனிப்படை அமைத்து கைது நடவடிக்கையும் மேற்கொண்டது.

போலீசாரின் விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து பீகாரைச் சேர்ந்த அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விபரங்கள் பீகார் மாநில காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர், பீகார் மாநில போலீசார் அமன்குமார், மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலி வீடியோக்களை தயாரிப்பதில் யூடியூபர் மணிஷ் காஷ்யப்பிற்கு முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டது. யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு மணிஷ் காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் இருந்த சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் முடக்கினர்.

பீகார் மாநில தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று(மார்ச்.18) யூடியூபர் மணிஷ் காஷ்யப் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ஜக்திஷ்பூர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைதான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மணிஷ் காஷ்யப்பின் ட்விட்டர் பக்கத்தில் கமென்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் கைது நடவடிக்கைக்கு முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான கபில் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், மணிஷ் காஷ்யப் கைது எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதாகவும், இது ஒரு சர்வாதிகார நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நடவடிக்கை பீகார் அரசு பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருப்பூரில் பீகார் மாநில தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக போலியான வீடியோக்கள் பரவியதால் அச்சமடைந்த வட மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பின்னர் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் போலி வீடியோக்கள் குறித்து பீகார் அரசுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.

இதையும் படிங்க: போலி வீடியோ வெளியிட்ட யூ-டியூபர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.