Airport: செயற்கைகோள் செல்போனுடன் வந்த அமெரிக்கர் கைது.. உளவாளியா என விசாரணை..

author img

By

Published : Jan 21, 2023, 4:14 PM IST

சேட்டிலைட் செல்போன்

மேற்கு வங்கத்தில் விமான நிலையத்திற்கு செயற்கைகோள் செல்போனுடன் வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். உளவு பார்க்க மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிலிகுரி: மேற்கு வங்கம் மாநிலம் பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க நாட்டவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சோதனையிட்டனர். இதில் அந்த அமெரிக்கர் தன் உடைமைகளுக்குள் செயற்கைகோள் செல்போனை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிரவாத மற்றும் உளவு உள்ளிட்ட ரகசிய பணிகளில் ஈடுபடுபவர்கள் செயற்கைகோள் செல்போனை பயன்படுத்தும் நிலையில், அமெரிக்கர் மீது சந்தேகம் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து உள்ளூர் போலீசாரிடம் அமெரிக்கர் ஒப்படைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கைதான அமெரிக்கர் தாமஸ் எஸ்ரோ சீட்ஸ் என அடையாளம் காணப்பட்டது. கைது செய்யப்பட்ட தாமஸ் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்த அமெரிக்க நிறுவனம், இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து நமது ராணுவ வீரர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தாமஸ் கடந்த 12ஆம் தேதி இந்தியா வந்த நிலையில், எல்லைப் பாதுகாப்பில் ட்ரோன்கள் உதவியுடன் உயர்தர கண்காணிப்பை மேற்கொள்வது குறித்து இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வந்ததாகவும், பயிற்சி முடிந்த நிலையில் மேற்கு வங்கம் வழியாக டெல்லி சென்று அங்கிருந்து அமெரிக்க விமானத்தை பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் தாமஸ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் இந்திய ராணுவத்திற்கு ட்ரோன் பயிற்சி அளிக்க வந்தவரா அல்லது உளவு வேலை பார்ப்பதற்காக செயற்கைகோள் செல்போனை கொண்டு வந்தாரா என விசாரித்து வருவதாகவும், சம்பவம் தொடர்பாக மற்றொருவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு; 6 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.