மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை 'லீ குவான் யூ' நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

author img

By

Published : May 25, 2023, 9:52 AM IST

மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ க்கு நினைவுச் சின்னம்; ஸ்டாலின் அறிவிப்பு!

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ-க்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் எழுப்ப உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை 'லீ குவான் யூ' நினைவுச் சின்னம்

சிங்கப்பூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படும் லீ குவான் யூ க்கு நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்துள்ளதாக, சிங்கப்பூரில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (24.05.2023) சிங்கப்பூரில், சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், “வேர்களைத் தேடி” என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், “சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால் தான், தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால் தான் லீ குவான் யூ இறந்தபோது சிங்கப்பூரின் நாயகன் என்று தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி போற்றினார். எனவே, லீ குவான் யூ வுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும் பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத் திருப்பாலக்குடி, கீழத் திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்த கிராமங்களில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும், சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, "வேர்களைத் தேடி” என்று புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, பண்டைய தமிழர்களின் கட்டடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு:முதலமைச்சரை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.