ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி சொத்துக்கு சீல்!

author img

By

Published : Dec 5, 2022, 1:41 PM IST

மகாராஸ்டிராவில் உள்ள ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துக்கு சீல்

ஹைதராபாத் நிஜாம் வாரிசுக்களுக்கும் திலீப் தக்கர் என்பவருக்கும் எற்பட்ட சொத்து தகராறில் மஹாபலேஷ்வரில் உள்ள ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்து சீல் வைக்கப்பட்டது.

சதாரா: மஹாபலேஷ்வரில் 15 ஏக்கர் பரப்பில் பங்களாவுடன் உள்ள ஹைதராபாத் நிஜாமின் ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார். நீண்டகாலமாகச் சொத்துரிமை பிரச்சினையைச் சந்தித்து வரும் நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மகாராஷ்டிரா அரசு சொத்தை காலி செய்து, மறு உத்தரவு வரும் வரை சீல் வைத்தது.

மஹாபலேஷ்வர் தாசில்தார் சுஷ்மா சவுத்ரி பாட்டீல் மேற்பார்வையில் ஞாயிற்றுக்கிழமை பிரதான பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊழியர் குடியிருப்புகளை நிர்வாகத்தினர் கையகப்படுத்தினர். முன்னாள் மேயர் ஸ்வப்னாலி ஷிண்டே மற்றும் அவரது கணவர் குமார் ஷிண்டே ஆகியோர் பல ஆண்டுகளாகப் பிரதான பங்களாவை ஒட்டி உள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அரசு நடவடிக்கையைத் தொடர்ந்து, அவர்களும் காலி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பார்சி வழக்கறிஞர்களுக்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட இந்த சொத்து பிரிட்டிஷ் காலத்திலிருந்தே உள்ளது. 1952 இல் சுதந்திரத்திற்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அல்லி கானிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ரூ.59 லட்சத்து 47 ஆயிரம் வருமான வரி பாக்கி வைத்திருந்ததால், தொகை திரும்பப் பெறும் வரை சொத்தினை விற்கவோ, அடைமானம் வைக்கவோ அல்லது எந்தவொரு நிதி முறையிலும் கையாளப்படவோ தடைசெய்யப்பட்டிருந்தது. வரி பாக்கி பிரச்சினைகள் பின்னர் சரிசெய்யப்பட்டன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிஜாமின் வாரிசாக நவாப் மிர் பர்கத் அல்லி கான்பகதூர் நியமிக்கப்பட்டார். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி குத்தகைதாரர்கள் அனைவரின் பெயரையும் நீக்கி சொத்துக்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, கடந்த 2005-ம் ஆண்டு நிலைமை சீரானது.

2016-ம் ஆண்டு திலீப் தக்கர் பெயரில் சொத்து மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து தக்கருக்கும், நிஜாமின் வாரிசுக்கும் இடையே சொத்து உரிமை தொடர்பாகத் தகராறுகள் இருந்து வந்தன. டிசம்பர் 1ம் தேதி நடந்த மோதலை கவனத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை உட்லேண்ட் சொத்தை சீல் செய்ய சதாரா ஆட்சியர் ருசேஷ் ஜெய்வன்ஷி உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.