ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார் டிம் குக்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக, அந்நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவின் தற்போதைய தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் பொறுப்பேற்க உள்ளார்.

Published : April 21, 2026 at 9:34 PM IST
ஹைதராபாத்: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவியில் இருந்து டிம் குக் விலகப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன், மேக் கணினி, ஐபேட், ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை தயாரித்து தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், கடந்த 2011-ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது. அதே ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக டிம் குக் பொறுப்பேற்றார். கடந்த 15 ஆண்டுகளில் டிம் குக்கின் அயராத உழைப்பால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் தயாரிப்பில் சிறப்பிடம் பிடித்து, 3.6 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி கண்டது.
இந்நிலையில், 65 வயதாகும் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்தப் பொறுப்பை, ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்டுவேர் பிரிவின் தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் ஏற்கவுள்ளார்.
இதையடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பில் இருந்து டிம் குக் பணிகளை பார்ப்பார் என்றும், தற்போதைய நிர்வாகத் தலைவரான ஆர்தர் லெவின்சன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் ரீட் ஹேஸ்டிங்ஸ் ஆகியோர் தலைமைச் செயல் அதிகாரியாக வெற்றிகரமாக தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்தனர். அதுபோலவே, டிம் குக்கும் தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: வைரத் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் ஆராய்ச்சியை உலக அரங்கிற்கு எடுத்து செல்லும் மெட்ராஸ் ஐஐடி
இதுகுறித்து டிம் குக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியதையும், ஒரு மிகச்சிறந்த நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டதையும் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த பெரும் பேறாக கருதுகிறேன். ஆப்பிள் நிறுவனத்தில் புதுமைச் சிந்தனையும் படைப்பாற்றல் திறனும் ஆழ்ந்த அக்கறையும் கொண்ட குழுவினருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன்" என்றார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்க இருக்கும் ஜான் டெர்னஸ், அந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளாக ஐபோன், ஐபேட், மேக் கணினி குழுவின் ஹார்டுவேர் உற்பத்தி பிரிவில் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.
புதிய பதவியை ஏற்பது குறித்து ஜான் டெர்னஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கான அறிக்கையை ஏப்ரல் 30-ம் தேதி வெளியிட உள்ளது. அன்றைய தினம் டிம் குக்கும், ஜான் டெர்னஸும் தலைமை பொறுப்பு மாற்றம் குறித்து கூடுதல் தகவல்களை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான காலகட்டத்தில், புதிய தலைமைச் செயல் அதிகாரிக்கான மாற்றம் நிகழ்கிறது. கடந்த 2007-ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தியதில் இருந்து தகவல் தொடர்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழலில், ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு ஜான் டெர்னஸுக்கு அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

