ETV Bharat / technology

ஆழ்கடல் ஆராய்ச்சியில் புதிய மைல்கல் - முதன்முறையாக விஞ்ஞானிகளுடன் பயணிக்கப் போகும் 'மட்ஸ்யா 6000'

'மட்ஸ்யா 6000' என்ற இந்த வாகனம் 3 மனிதர்களை (அதாவது விஞ்ஞானிகளை) ஒரே நேரத்தில் கடலுக்கு கீழே 6,000 மீட்டர் ஆழம் வரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் திறன் கொண்டது.

மட்ஸ்யா 6000 ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்
மட்ஸ்யா 6000 ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2026 at 10:08 PM IST

5 Min Read
Choose ETV Bharat

- BY எஸ்.ரவிச்சந்திரன்

தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகம்... சென்னை பள்ளிக்கரணையில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தான் நாட்டிலேயே ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது.

ஆழ்கடல் ஆராய்ச்சி என்பது கடலின் மேற்பரப்பில் இருந்து 200 மீட்டருக்கும் கீழ் உள்ள பகுதிகளை பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறையாகும். சூரிய ஒளி புக முடியாத, கடுமையான அழுத்தமும், உறைபனி குளிரும் நிறைந்த இந்த பகுதி பூமியின் மிக விசித்திரமான மற்றும் அதிகம் அறியப்படாத உலகம் என்றால் மிகையல்ல.

ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்வது ஏன் என்பது குறித்த வரைகலை
ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்வது ஏன் என்பது குறித்த வரைகலை (ETV Bharat Tamil Nadu)

ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவது ஏன்?

கடற்படுகையில் கொட்டிக் கிடக்கும் நிக்கல், கோபால்ட், தாமிரம் மற்றும் மாங்கனீசு நிறைந்த பல்லுலோக முடிச்சுகளை (Polymetallic Nodules) கண்டறிவதே ஆழ்கடல் ஆராய்ச்சியின் முதன்மையான நோக்கம். இந்த கனிமங்கள் மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு மிகவும் அத்யாவசியமானவை.

ஆழ்கடலில் கடுமையான வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு மத்தியில் வாழும் நுண்ணுயிரிகளிடம் இருந்து புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய் தீர்க்கும் மருந்துகளுக்கான புதிய மூலக்கூறுகளைக் கண்டறியவும் இந்த ஆராய்ச்சி உதவுகிறது.

சூரிய ஒளியே இல்லாத சூழலில், வேதிச்சேர்க்கை மூலம் உயிர்வாழும் விசித்திரமான கடல் உயிரினங்கள் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பை பற்றி வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்தவும் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

பூமியின் நிலப்பரப்பை விட கடற்பரப்பை பற்றி மிகக் குறைவாகவே இதுவரை ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. எனவே, விண்வெளி ஆராய்ச்சிக்கு இணையாக ஆழ்கடல் ஆராய்ச்சியும் உலக நாடுகளால் உற்றுநோக்கப்படுகிறது.

ஆழ்கடல் ஆராய்ச்சியில் உள்ள சவால்கள்
ஆழ்கடல் ஆராய்ச்சியில் உள்ள சவால்கள் (ETV Bharat Tamil Nadu)

ஆழ்கடல் ஆராய்ச்சியில் உள்ள சவால்கள்

கடலின் கீழே செல்ல செல்ல நீரின் அழுத்தம் மிக கடுமையாக இருக்கும். ஒரு மனிதன் மீது 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிற்பதற்கு சமமான அழுத்தம் (சுமார் 600 மடங்கு வளிமண்டல அழுத்தம்) இருக்கும். அதாவது, நமது கட்டை விரல் நகத்தின் மீது (சுமார் 1 சென்டி மீட்டர் பரப்பளவு) ஒரு வளர்ந்த ஆப்பிரிக்க யானை நிற்பதற்கு சமம். ஒரு ஆப்பிரிக்க யானையின் எடை சுமார் 5 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் கிலோ ஆகும். அந்த முழு எடையும் நமது சிறிய நகத்தின் மீது அழுத்தினால் எப்படி இருக்குமோ அது தான் ஆழ்கடல் அழுத்தம்.

ஆழ்கடல் அழுத்தம் என்பது சுமார் 1,100 ஏடிஎம் (வளிமண்டல அழுத்தம்) என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 400 பேருந்துகளை ஒன்றன் மீது ஒன்றாக மனிதன் மீது அடுக்கி வைத்தால் எவ்வளவு எடை இருக்குமோ அதற்கு சமம். ஒரு பேருந்தின் எடை சுமார் 10 டன்.

கடல் அழுத்தம் எப்படி இருக்கும்?
கடல் அழுத்தம் எப்படி இருக்கும்? (ETV Bharat Tamil Nadu)

மேலும், குளிர்பான காலி அலுமினிய கேனை கைகளால் நசுக்கினால் எப்படி சுருங்குமோ, அதே போல பலம் வாய்ந்த இரும்பினால் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கூட ஆழ்கடல் அழுத்தம் நசுக்கிவிடும்.

மேலும், 1,000 மீட்டருக்குக் கீழே சூரிய ஒளி முற்றிலுமாக இருக்காது. மேலும், அங்குள்ள நீரின் வெப்ப நிலை என்பது உறைநிலைக்கு அருகே (1°C முதல் 4°C வரை) இருக்கும். காற்றில் பயணிப்பது போல ரேடியோ அலைகள் நீருக்குள் எளிதாகப் பயணிக்காது. இதனால் ஆழ்கடலில் உள்ள வாகனங்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம்.

"மட்ஸ்யா-6000" என்றால் என்ன?

ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது தான் 'மட்ஸ்யா 6000' என்ற நீர்மூழ்கி வாகனம். இது தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகளால் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை போல, இது ஆழ்கடலின் பொக்கிஷங்களை ஆராயும் ஒரு மிகப் பெரிய திட்டமாகும்.

'மட்ஸ்யா 6000' என்ற இந்த வாகனம் 3 மனிதர்களை (அதாவது விஞ்ஞானிகளை) ஒரே நேரத்தில் கடலுக்கு கீழே 6,000 மீட்டர் ஆழம் வரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் திறன் கொண்டது. கடலின் மிகக் கடுமையான அழுத்தங்களை தாங்குவதற்காக, இது 2.1 மீட்டர் விட்டம் மற்றும் 80 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட விசேஷமான டைட்டானியம் அலாய் கோள வடிவப் பெட்டகத்தைக் கொண்டுள்ளது.

'மட்ஸ்யா 6000' குறித்த வரைகலை
'மட்ஸ்யா 6000' குறித்த வரைகலை (ETV Bharat Tamil Nadu)

முதன்முறையாக மனிதர்களுடன் 50 மீட்டர் பயணிக்க தயாரான 'மட்ஸ்யா 6000'

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் மைல்கல்காக கருதப்படும் மனிதர்களை கடலுக்கு அடியில் அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும் பணி நாட்டிலேயே முதன்முறையாக அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பாலாஜி, "அடுத்த மாதம் 3 பேருடன் கடலுக்கு அடியில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு மட்ஸ்யா பயணிக்கவுள்ளது. ஏற்கெனவே, இந்த வாகனம் முதன்முறையாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை துறைமுகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

இதையும் படிங்க.. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதித்த சென்னை மாணவி; தந்தை நெகிழ்ச்சி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "அடுத்ததாக மட்ஸ்யா 6000 நீர்மூழ்கி வாகனம், வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் கடலுக்கு அடியில் 500 மீட்டர் ஆழத்தில் மனிதர்களுடன் பயணம் மேற்கொள்ள உள்ளது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மட்ஸ்யா 6000-ன் பாகங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை பார்த்து விட்டோம். அதில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டதால், அடுத்தகட்டமாக 50 மீட்டர் ஆழத்திற்கு அனுப்பி சோதனை மேற்கொள்ள தற்போது தயாராகி வருகிறோம். இந்த சோதனை சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

கடலுக்கு கீழே சுமார் 50 மீட்டர் ஆழத்திற்கு பயணிக்கவுள்ள இந்த வாகனத்தில், தேசிய பெருங்கடல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மூன்று பேர் செல்ல உள்ளனர். இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு முறை இதே போல் சோதனை மேற்கொள்ள இருக்கிறோம்.

அடுத்த மாத ஆய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்ட நிலையில், மட்ஸ்யா 6000-ஐ 500 மீட்டர் ஆழ சோதனைக்கும் தயார்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறோம். அதில் கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் 5,000 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்வோம்" என்றார்.

இதையும் படிங்க.. ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோட் தொழில்நுட்பம்; சென்னை என்.ஐ.ஓ.டி பயிலரங்கத்தில் 300 பேர் பங்கேற்பு

தொடர்ந்து நம்மிடம் பேசிய தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானியும், மட்ஸ்யா 6000 திட்ட இயக்குநருமான சத்தியநாராயணன், "மட்ஸ்யா 6000 திட்டம் துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடலுக்கு அடியில் மனித ஆய்வு என்பது வித்தியாசமானது. கண்ணால் பார்த்து ஆழ்கடலின் அதிசயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம். மனிதர்களை இயந்திரத்தில் வைத்து அனுப்பும் போதும் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு, உள்ளே இருக்கும் நீரை வெளியேற்றினால் போதும். வாகனம் தானாக மேலே வந்து விடும். மேலும், போதுமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனத்தின் உள்ளே இருப்பவர்களே இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மட்ஸ்யா 6000 வாகனத்தில் பயணிக்க இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள மையங்கள் மூலம் பயிற்சி அளித்துள்ளோம்.

இந்த நீர்மூழ்கி வாகனம், கடலுக்குள் 12 மணி நேரம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6,000 மீட்டர் ஆழத்திற்கு செல்வதற்கு நான்கு மணி நேரமும், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்ள 4 மணி நேரமும், பின்னர் கடலில் மேல் பகுதிக்கு வருவதற்கு 4 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.. தமிழ்நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

இதில் செல்லும் விஞ்ஞானிகள் அவசர காலங்களில் 96 மணி நேரம் கடலுக்குள் இருக்க முடியும். அதிகபட்சமாக 108 மணி நேரம் இருக்கலாம். ஆனால் 12 மணி நேரத்திற்குள் வெளியே வந்து விடுவார்கள். மேலும் ஆராய்ச்சிப் பணிகளை பகல் நேரத்திலேயே மேற்கொள்ளப்படும். இரவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதில் மொத்தம் 61 ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்துள்ளோம். அதில் இருந்து அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். அவர்கள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை சுத்தம் செய்யவும் தேவையான வசதிகளை செய்துள்ளோம்.

கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு மிகப் பெரிய சவாலாக இருக்கும். கடலுக்கு அடியில் மின்காந்த அலைகள் பயணிக்காது. எனவே, அக்கோசிட் (Acoustic) டெலிபோன் மூலமாக மட்ஸ்யா வாகனத்தில் இருப்பவர்கள் கப்பலில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் " என்று தெரிவித்தார்.