ETV Bharat / technology

வேறெதிலும் இல்லாத மறைமுக திரை; சாம்சங் கேலக்சி எஸ்26 புதிய மாடல்கள் அறிமுகம்

வேறெந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத வகையில், சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடலில் ‘மறைவான திரை’ என்ற புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போன் (Samsung India)
author img

By ETV Bharat Tech Team

Published : February 26, 2026 at 11:01 AM IST

|

Updated : February 26, 2026 at 3:21 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் தங்களின் புதிய கேலக்சி எஸ்26 சீரிஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து டெக் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சாம்சங் நிறுவனத்தின் ‘அன்பேக்டு இவென்ட் 2026’ நிகழ்வு நள்ளிரவில் அரங்கேறியது. அதில், நிறுவனத்தின் பிரீமியம் மாடல் போன்களான கேலக்சி எஸ்26, கேலக்சி எஸ்26+, கேலக்சி எஸ்26 அல்ட்ரா ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இதனுடன் கேலக்சி பட்ஸ் 4 சீரிஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் மாடல்களும் இடம்பெற்றன.

சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ் அறிமுகம்
சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ் அறிமுகம் (Samsung India)

தென் கொரிய நிறுவனமான சாம்சங், அதன் எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மிகவும் பெயர் பெற்றவை. அதன்படியே, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எஸ்26 மாடல் போன்களிலும் பல மேம்பட்ட அம்சங்களை நிறுவனம் இணைத்துள்ளது பயனர்கள் மத்தியில் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக, சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போனில், நிறுவனம் ‘மறைவான திரை’ (Privacy Display) அம்சத்தினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, வங்கி தொடர்பாகவோ அல்லது வேறேதும் முக்கியமான வேலைகளை நாம் போனில் மேற்கொண்டிருக்கும்போது, நம் அருகில் யாரேனும் போன் திரையை கவனிக்கிறார்களா என்ற பயம் இருக்கும். இதை, இந்த மறைவான திரை அம்சம் முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.

எந்த ஒரு திரை பாதுகாப்பு கண்ணாடிகளும் (Screen protectors) இல்லாமல், எஸ்26 அல்ட்ரா மாடல் போனில் கொடுக்கப்பட்டுள்ள இந்த அம்சத்தை வைத்து, அருகில் இருப்பவர்கள் கண்களில் இருந்து, நம் போன் திரையில் தெரியும் தரவுகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ் விலை என்ன?

சாம்சங் எஸ்26, எஸ்26 பிளஸ் ஆகிய இரு மாடல் போன்களும் 12ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எஸ்26 போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.87,999 எனவும், 512ஜிபி விலை ரூ.1,07,999 ஆகவும் நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. முறையே, பிளஸ் மாடலின் 256ஜிபி வகை ரூ.1,19,999 என்ற விலையிலும், 512ஜிபி ரூ.1,39,999 என்ற விலையிலும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சாம்சங்கின் மேம்பட்ட பிரீமியம் மாடலான கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடலின் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் வகை போனின் விலை ரூ.1,39,999 ஆகவும், 12ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் போனின் விலை ரூ.1,59,999 ஆகவும், டாப் மாடலாக இருக்கும் 16ஜிபி ரேம், 1டிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.1,89,999 எனவும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் விலை நிர்ணயம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்சி எஸ்26 மாடல் நிறங்கள்
சாம்சங் கேலக்சி எஸ்26 மாடல் நிறங்கள் (Samsung India)
வகைரேம்ஸ்டோரேஜ்விலை
சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா12ஜிபி256ஜிபிரூ. 1,39,999
சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா12ஜிபி512ஜிபிரூ. 1,59,999
சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா16ஜிபி1டிபிரூ. 1,89,999
சாம்சங் கேலக்சி எஸ்26 பிளஸ்12ஜிபி256ஜிபிரூ. 1,19,999
சாம்சங் கேலக்சி எஸ்26 பிளஸ்12ஜிபி512ஜிபிரூ. 1,39,999
சாம்சங் கேலக்சி எஸ்2612ஜிபி256ஜிபிரூ. 87,999
சாம்சங் கேலக்சி எஸ்2612ஜிபி512ஜிபிரூ. 1,07,999

புதிய கேலக்சி எஸ்26 சீரிஸ் போன்கள் கோபால்ட் வயலெட், வைட், பிளாக், ஸ்கை ப்ளூ ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. சாம்சங் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் சில்வர் ஷேடோ, பிங்க் கோல்டு ஆகிய இரண்டு சிறப்பு நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன்களை பயனர்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ்: புதிய அம்சங்கள் என்னென்ன?

புதிய சாம்சங் கேலக்சி எஸ்26 மாடல்களில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்காக, நிறுவனத்தின் பிரத்யேக பிக்ஸ்பி (Bixby), கூகுளின் ஜெமினை (Google Gemini), பெர்பிளக்ஸ்சிட்டி (Perplexity) ஆகிய மூன்று ஏஐ பயன்பாடுகள் எஸ்26 மாடல் போன்களில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்திறன்களை ஒருங்கிணைத்து, ‘கேல்க்சி ஏஐ’ என்ற ஹைடெக் தொழில்நுட்ப சாளரத்தை சாம்சங் நிறுவனம் பயனர்களுக்காக மேம்படுத்தியுள்ளது.

இந்த போன்களில் வரும் அழைப்புகளை கண்காணிக்கவும், தவறவிட்ட நிகழ்வுகளை நினைவூட்டவும், பிரவுசிங் சார்ந்த வேலைகளை எளிமையாக்கவும், கேமரா திறனை மேம்படுத்தவும் இவை பயனர்களுக்கு உதவியாக இருக்கும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், போனை கையில் தொடாமலேயே, பல வேலைகளை குரல் கட்டளைகள் (Voice Command) மூலம் பயனர்கள் எளிதாக செய்து முடிக்கலாம். எடுத்துக்காடாக, ‘எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. நான் தூங்கணும்’ (I'm so tired. I want to sleep) என்ற ஒற்றை கட்டளையில், போனை ‘ஸ்லீப் மோடு’-க்கு மாற்றிவிட முடியும்.

குறிப்பாக, சாம்சங் கேலக்சி எஸ்26 அல்ட்ரா மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் மறைவான திரை அம்சம், இந்த வெளியீட்டின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. தேவையான செயலிகளுக்கு மட்டும் இந்த அம்சம் பயன்படும் வகையில் நாம் மாற்றி அமைக்கலாம் என்பது, இதன் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

கேலக்சி எஸ்26 அல்ட்ராகேலக்சி எஸ்26+கேலக்சி எஸ்26
திரை6.9 அங்குல QHD+ டைனமிக் அமோலெட் 2X | 120Hz, 10-பிட் கலர்6.7 அங்குல QHD+ டைனமிக் அமோலெட் 2X | 120Hz6.3 அங்குல FHD+ டைனமிக் அமோலெட் 2X | 120Hz
திரை பாதுகாப்புகார்னிங் கொரில்லா ஆர்மர் 2
சிப்செட்சாம்சங் போன்களுக்காக பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலீட் ஜென் 5சாம்சங் எக்சினோஸ் 2600சாம்சங் எக்சினோஸ் 2600
ரேம்16ஜிபி வரை12ஜிபி12ஜிபி
ஸ்டோரேஜ்1டிபி வரை256ஜிபி / 512ஜிபி256ஜிபி / 512ஜிபி
இயங்குதளம்ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான சாம்சங் ஒன் யூஐ 8.5
பின்பக்க கேமரா200 மெகாபிக்சல் + 50 மெகாபிக்சல் டெலிபோட்டோ (5x சூம்) + 50 மெகாபிக்சல் (அல்ட்ராவைட்) + 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ (3x சூம்)50 மெகாபிக்சல் + 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ (3x சூம்) + 12 மெகாபிக்சல் (அல்ட்ராவைட்)
முன்பக்க கேமரா12 மெகாபிக்சல்
பேட்டரி5,000mAh4,900mAh4,300mAh
சார்ஜிங்60W45W25W
வயர்லெஸ் சார்ஜிங்அதிவேக வயர்லெஸ் சார்ஜிங்வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0
எடை214 கிராம்190 கிராம்167 கிராம்

மேலும், முந்தைய சாம்சங் கேலக்சி எஸ்25 மாடல்களை விட, புதிய கேலக்ஸி எஸ்26 மாடல்கள் சற்று மெலிதாகவும், பேட்டரியின் அளவு பெரிதாகவும் கொடுக்கப்பட்டுள்ளன. அடிப்படை மாடலான எஸ்26 போனின் திரையும் 6.3 அங்குலம் என்றளவில் சற்று பெரிதாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தற்போது பயனர்கள் முன்பதிவு செய்யலாம் என சாம்சங் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்த பயனர்களுக்கு மார்ச் 6 முதல் கேலக்சி எஸ்26 சீரிஸ் போன்கள் அனுப்பி வைக்கப்படும் என சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

Last Updated : February 26, 2026 at 3:21 PM IST