ETV Bharat / technology

''இந்தியாவிலேயே 2 ஆவது சூப்பர் கம்ப்யூட்டர்'' - சென்னை ஐஐடி உருவாக்கி அசத்தல் சாதனை

4,000-க்கும் மேற்பட்ட லேப்டாப்களை பயன்படுத்தி தரவுகளை பெறுவதற்கு ஆகும் காலத்தை, சூப்பர் கம்ப்யூட்டரில் 2 மணி நேரத்தில் முடிக்க முடியும். புதியதாக உருவாக்கப்படும் மருந்துகளை பரிசோதனை செய்யவும், காலநிலையை விரைவாக கணிக்கவும் முடியும்.

சென்னை ஐஐடி உருவாக்கிய சூப்பர் கம்ப்யூட்டர்
சென்னை ஐஐடி உருவாக்கிய சூப்பர் கம்ப்யூட்டர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 9:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

- By எஸ்.ரவிச்சந்திரன்

சென்னை: சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்ட 'பரம்சக்தி' என்ற சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் மருந்துகள், பொறியியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்று இந்த மையத்தின் தலைவர் பணிகுமார் தெரிவித்தார்.

சென்னை ஐஐடியில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் மதர்போர்டு கொண்டு ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டிங் அமைப்பாக 'பரம்சக்தி' நிறுவப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் கிருஷ்ணன் கடந்த 3 ஆம் தேதி திறந்து வைத்துள்ளார்.

இதன் மூலம் மிகப் பெரிய ஆராய்ச்சிகளையும், சிக்கலான பல்வேறு காரணிகளுக்கும் விரைவாக தீர்வை காண முடியும். பல வருடங்கள் எடுக்கும் ஆராய்ச்சி பணிகளின் காலத்தை குறைப்பதுடன் விண்வெளி, உற்பத்தி, மருந்துகள் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இந்தியா உலக அளவில் போட்டியிட முடியும் என்று சென்னை ஐஐடி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் மையம்
சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் மையம் (ETV Bharat Tamil Nadu)

பரம்சக்தியின் கீழ் பரம் ருத்ரா சூப்பர் கம்ப்யூட்டிங் கிளஸ்டரும், 24 மணி நேரமும் மின்சாரம், மேம்பட்ட குளிரூட்டல் மற்றும் தரவு மைய செயல்பாடுகளுக்கான ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தின் (C-DAC) மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) இணைந்து நிதியளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் மையத்தின் தலைவர் பணிகுமார் கூறும் போது, ''பரம்சக்தி மையம் சென்னை ஐஐடியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 650 கம்ப்யூட்டர்கள் இணைந்து ஒரே கம்ப்யூட்டராக பயன்படுத்த கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் இடம் பெற்றுள்ளது. இதன் கொள்ளளவு சுமார் 21 ஆயிரம் கோர்ஸ் ஆகும். லேப்டாப்பில் 8 கோர் இருக்கும். 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட லேப்டாப் இணைந்து செயல்படும் திறன் கொண்டது. 4500 டிபி சேமிக்கும் திறன் கொண்டது.

சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் மையம்
சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் மையம் (ETV Bharat Tamil Nadu)

மிகப் பெரிய தரவுகளை பயன்படுத்தி பல்வேறு தொழில்நுட்ப சிக்கவ்களுக்கு தீர்வு காண முடியும். இதேபோல் லேப்டாப் பயன்படுத்தி தரவுகளை பெறுவதற்கு ஆகும் காலத்தை சூப்பர் கம்ப்யூட்டரில் 2 மணி நேரத்தில் முடிக்க முடியும். புதியதாக உருவாக்கப்படும் மருந்துகளை பரிசோதனை செய்யவும், காலநிலையை விரைவாக கணிக்கவும் முடியும்.

கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு இந்தியாவில் ஏற்கெனவே ஆராய்ச்சிகளை கம்ப்யூட்டர் பயன்படுத்தி செய்ததால் விரைந்து தடுப்பூசியை உருவாக்க முடிந்தது. இந்தியாவில் உள்ள 37 சூப்பர் கம்ப்யூட்டரில் சென்னை ஐஐடி 2 வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் சூப்பர் கம்ப்யூட்டரில் 17 ஆவது இடத்தில் உள்ளோம்," என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே 2 ஆவது சூப்பர் கம்ப்யூட்டர் (ETV Bharat Tamil Nadu)

மேலும் கூறிய அவர், "சென்னை ஐஐடியில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மதர்போர்டு ருத்ரா பிளாட்பார்ம் இந்த சூப்பர் கம்யூட்டரை உருவாக்கி உள்ளோம். இதற்கான ப்ராசஸர் (Processor) மட்டும் இறக்குமதி செய்து பொருத்தி உள்ளோம். சாப்ட்வேரை சென்னை ஐஐடியில் உருவாக்கி உள்ளோம். சக்தி ப்ராசஸர் பயன்படுத்தும் போது இந்தியாவிலேயே முழுவதும் உருவாக்கியதாக மாறும். சூப்பர் கம்ப்யூட்டர் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மடங்கு வேகமாக செயல்படும்.

இந்தியாவில் அறிவியல் துறையில் மாணவர்கள் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்கள் 40 சதவீதம் பயன்படுத்துவதற்கு இதனை அளிக்க உள்ளோம். ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க உள்ளோம். எனவே, மாணவர்கள் ஐடி வாங்கி ஆராய்ச்சிகளை செய்துகொள்ளலாம்.

இதையும் படிங்க: ''தீர்ப்பு வழங்கியதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிக்கே அச்சுறுத்தல்'' - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு

சென்னை ஐஐடியில் பயோடெக்னாலாஜி, மெடிக்கல் சயின்ஸ் துறைகளும் உள்ளன. இந்த துறைகளில் மருந்து தொடர்பான ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். ஆன்டிபாக்ட்ரியல் மருந்துகளை கண்டுபிடிக்க கம்ப்யூட்டர் மூலமாக ஆய்வு செய்துவிட்டு நேரடி பரிசோதனை செய்யும்போது அந்த மருந்துகளை விரைவாக கொண்டு வர முடியும்'' என்று பணிகுமார் கூறினார்.