ETV Bharat / technology

பீரங்கி குண்டுகளுக்கு ரேம்ஜெட் தொழில்நுட்பம்: 40-ல் இருந்து 70 கி.மீ ஆக அதிகரித்த வேகம்; சென்னை ஐஐடி-யின் சோதனை வெற்றி

ரேம்ஜெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், சுமார் 120 கி.மீ வரை சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் கள துப்பாக்கிச் சுடும் தளத்தில் சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட ரேம்ஜெட் பீரங்கி குண்டு சோதனை.
ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் கள துப்பாக்கிச் சுடும் தளத்தில் சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட ரேம்ஜெட் பீரங்கி குண்டு சோதனை. (IIT-M)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 10, 2026 at 1:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

-By எஸ் ரவிச்சந்திரன்

சென்னை: இலக்குகளை தாக்கி அழிக்கும் சாதாரண பீரங்கி குண்டுகளின் வேகத்தை அதிகரிக்க, சென்னை ஐஐடி ரேம்ஜெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது.

சென்னை ஐஐடி (IIT-M) உருவாக்கிய ரேம்ஜெட் பீரங்கிக் குண்டுகளின் (Ramjet-powered artillery shells) சோதனை, ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் துப்பாக்கி சுடும் தளத்தில் (Pokhran Field Firing Range) இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அமெரிக்கா, தென் கொரியா போன்ற நாடுகள் இதை சோதனை செய்து வரும் நிலையில், இந்தியா அதில் முதன்மை இடத்தில் முன்னேறி வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரேம்ஜெட் பீரங்கி குண்டின் அமைப்பு
ரேம்ஜெட் பீரங்கி குண்டின் அமைப்பு (IIT-M)

இந்த சோதனையின் மூலம், சாதாரண 155 மி.மீ பீரங்கிக் குண்டுகளின் இலக்கை 30% முதல் 50% வரை அதிகரிக்க முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சோதனையின் போது 60 கி.மீ முதல் 70 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை, ரேம்ஜெட் அடிப்படையிலான குண்டுகள் துல்லியமாகத் தாக்கி அழித்தன.

ரேம்ஜெட் பீரங்கி குண்டுகள் ஏன் சிறப்பு வாய்ந்தவை?

சாதாரணமாக, ஒரு பீரங்கியில் இருந்து ‘ஷெல்’ என்று குறிப்பிடப்படும் குண்டுகளை செலுத்தும் போது, தொடக்க நிலையில் வெடிப்பு ஏற்படும். இதனால் கிடைக்கும் உந்துததலைப் பயன்படுத்தி, குண்டுகள் சுமார் 24 கி.மீ முதல் 40 கி.மீ வரையிலான இலக்குகளை தாக்க முடியும்.

ஆனால், ரேம்ஜெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட குண்டுகள், சுமார் 120 கி.மீ வரை சென்று இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். தற்போது, இந்திய ராணுவத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி போஃபோர்ஸ் (BOFORS / ULH), தனுஷ், வஜ்ரா, ஏ.டி.ஏ.ஜி.எஸ் (ATAGS) ஆகிய பீரங்கிகளில் இந்த சோதனை நடத்தி வெற்றி கண்டுள்ளது.

சென்னை ஐஐடி சோதனையில் கிடைத்த புதிய இலக்குகள் தொடர்பான புள்ளி விவரம்
சென்னை ஐஐடி சோதனையில் கிடைத்த புதிய இலக்குகள் தொடர்பான புள்ளி விவரம் (IIT-M)

அப்போது, போஃபோர்ஸில் இருந்து ஏவப்பட்ட ரேம்ஜெட் குண்டுகள் 43 கி.மீ தூரத்தை துல்லியமாக அடைந்தன. இதுவே, பயன்பாட்டில் இருக்கும் குண்டுகள் 24 கி.மீ இலக்கை மட்டுமே தாக்கி அழித்துள்ளன. முறையே, தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் தனுஷ் 55 கி.மீ, வஜ்ரா 62 கி.மீ, ஏ.டி.ஏ.ஜி.எஸ் 70 கி.மீ தூர இலக்கை தாக்கி, திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளன. இது பயன்பாட்டில் இருக்கும் குண்டுகளை விட 60% வரை அதிக தூரம் சென்று சோதனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றுள்ளன.

ரேம்ஜெட் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

நாம் பரவலாக அறிந்திருக்கும் டர்போஜெட் எஞ்சின்கள் போலல்லாமல், ரேம்ஜெட் தன்னகத்தே பல சிறப்புகளக் கொண்டு செயல்படுகிறது. இதன் காரணமாகவே, ஒளியை விட 3 முதல் 6 மடங்கு வேகத்தில் ரேம்ஜெட் எஞ்சின்களால் செயல்பட முடியும். இதற்கு முக்கியக் காரணம், இதன் வடிவமைப்பு தான்.

ரேம்ஜெட் தொழில்நுட்ப சார்ந்து உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டு
ரேம்ஜெட் தொழில்நுட்ப சார்ந்து உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டு (IIT-M)

பொதுவாக டர்போஜெட் எஞ்சின்களில் இருக்கும் டர்போ ஃபேன், கம்ப்பரஷன் சேம்பருக்கான தனி அமைப்புகள் போன்றவை ரேம்ஜெட் எஞ்சின்களில் இருக்காது. அதற்கு பதிலாக, வேகமான நகர்வில் கிடைக்கும் காற்றின் விசையை உள்ளே இழுத்து, அதை அழுத்தி, எரிபொருள் உடன் கலந்து பின் பகுதிக்கு தள்ளும். அவ்வாறு கிடைக்கும் உந்துதலைப் பயன்படுத்தி இவை வேகமாக முன்னேறி செல்லும்.

இதை தான், தற்போது பீரங்கி குண்டுகளில் வைத்து சென்னை ஐஐடி சோதனை செய்துள்ளதாக, சென்னை ஐஐடி பேராசிரியர் ராமகிருஷ்ணா நம்மிடம் தெரிவித்தார். இதற்காக, 155 ரக பீரங்கி ஷெல்களின் (குண்டுகளின்) நடுப்பகுதியில், ரேம்ஜெட் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு எரிப்பு அறை (Combustion Chamber) உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், பயன்படுத்துவதற்காக சென்னை ஐஐடி ஒரு பிரத்யேக திண்ம எரிபொருளை (Solid Fuel) உருவாக்கியுள்ளது. இது ஆக்சிஜனை காற்றிலிருந்து எடுத்துக் கொண்டு, எரிப்புத் திறனை அதிகரித்து அழுத்தத்தை உருவாக்கும்.

சென்னை ஐஐடி பேராசிரியர் ராமகிருஷ்ணா, ரேம்ஜெட் பீரங்கிக் குண்டுகள் குறித்து விளக்கினார். (ETV Bharat)

இதன் முன் பக்க, மூக்கு போன்ற முனை பகுதி 3டி முறையில் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், காற்று உள்ளிழுப்புத் திறன் அதிகமாக இருக்கும். இவ்வாறு செயல்படும் ரேம்ஜெட் தொழில்நுட்ப பீரங்கி குண்டுகள், ஏவப்பட்டப் பின், வேகமாக முன்னேறி செல்லும் போது கிடைக்கும் காற்றின் அழுத்தத்தை எரிபொருளுடன் சேர்த்து புதிய திறனை உருவாக்குகிறது. மேலும், இதில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய சென்சார்கள், தவறாமல் இலக்கை தாக்க வழிநடத்துகிறது என்று ராமகிருஷ்ணா கூறினார்.

அந்த வகையில், சாதாரண பீரங்கி குண்டுகளை (ஒளியை விட 2 மடங்கு வேகம்) போலல்லாமல், ரேம்ஜெட் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த பீரங்கி குண்டுகள் ஒளியை விட 3 முதல் 6 மடங்கு வேகத்தில் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.

சோதனைகள் கடந்து வந்த பாதை

இந்திய ராணுவத்துடன் இணைந்து 2020-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பல கட்ட சோதனைகள் மூலம் முன்னேறியுள்ளது. சென்னை ஐஐடி உருவாக்கப்பட்ட 76 மி.மீ துப்பாக்கியைப் பயன்படுத்தி ஆரம்ப கால சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் 155 மி.மீ குண்டுகளை செலுத்தும் திறன் கொண்ட பீரங்கிகள் உதவியுடன் சோதனைகள் முன்னேற்ற நிலையை அடைந்தன.

இந்திய ராணுவத்துடன் சென்னை ஐஐடி இணைந்து நடத்தி ரேம்ஜெட் பீரங்கி குண்டு சோதனை
இந்திய ராணுவத்துடன் சென்னை ஐஐடி இணைந்து நடத்தி ரேம்ஜெட் பீரங்கி குண்டு சோதனை (IIT-M)
இதையும் படிங்க: முதல் முறையாக நிறுவப்பட்ட இந்தியாவின் அவசரகால மின்சார மீட்பு அமைப்பு - ஏன் இது அவசியம்?

இந்நிலையில், அதில் தற்போது வெற்றி கிடைத்துள்ளதாக, சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பீரங்கி குண்டின் செயல்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக, கூடுதல் தூரங்களில் இலக்கை அழிக்கும் சோதனை நடத்தப்படும் என்று சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.