பூமியின் மூலப்பொருள்கள் உருவானது எப்படி? ஆய்வில் வெளியான புதிய தகவல்
சூரிய குடும்பத்தின் மையப்பகுதியில் இருந்து பூமியின் மூலப்பொருட்கள் உருவாகி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Published : March 31, 2026 at 7:22 PM IST
ஹைதராபாத்: நாம் வாழும் பூமி எப்படி தோன்றியது? பூமியில் உள்ள பொருட்கள் எப்படி தோன்றின என்ற ஆய்வுகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. பூமியில் உள்ள நீர் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் சூரிய குடும்பத்திற்கு வெளியில் இருந்து பூமிக்கு வந்தவை என்று நம்பப்பட்டு வந்த நிலையில், சூரிய குடும்பத்தின் உள்பகுதியில் இருந்தே இவை வந்துள்ளன என்று புதிய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளான பவுலோ சோசி, டான் பவர் ஆகியர் ஆய்வு செய்து, தங்கள் ஆய்வு முடிவுகளை 'நேச்சர் அஸ்ட்ரானமி' பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் மெர்குரி கோள் உள்ளது. அதைத் தொடர்ந்து, வீனஸ், பூமி, மார்ஸ், ஜூபிடர், சனி, நெப்டியூன் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.
ஏற்கெனவே, பூமிக்கு அடுத்துள்ள மார்ஸ் மற்றும் வெஸ்டா என்ற சிறுகோளில் உள்ள மூலப் பொருட்களை போன்று பூமியிலும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதனால் சூரிய குடும்பத்தின் வெளியில் உள்ள கோள்களில் இருந்து மூலப்பொருட்கள் பூமியை வந்தடைந்திருக்கலாம் என்று கருதி வந்தனர்.
அதைத் தொடர்ந்து பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள மெர்குரி, வீனஸ் ஆகிய கோள்களில் உள்ள பொருள்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்படி, மெர்குரி, வீனஸ் ஆகியவற்றில் உள்ள மூலப்பொருட்களும், பூமியில் உள்ள மூலப்பொருட்களும் அதிக அளவில் ஒத்துப்போவதை கண்டறிந்துள்ளனர். இதனால் சூரிய குடும்பத்தின் உட்பகுதியில் இருந்தே பூமியில் உள்ள மூலப்பொருட்கள் உருவாகி இருப்பதாக அவர்கள் முடிவுக்கு வந்தனனர். இவர்கள், ஐசோடோப்பு பகுப்பாய்வு முறையில் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
அதாவது, ஒரு தனிமத்தில் உள்ள ஒரு அணுவில், எலக்ட்ரான்களும் புரோட்டான்களும் சம அளவில் இருக்கும். இது அந்த தனிமத்தின் அணு எண் என அழைக்கப்படுகிறது. அணுக்கருவில் புரோட்டானும், நியூட்ரானும் இருக்கும். புரோட்டான் மற்றும் நியூட்ரானின் கூட்டுத்தொகையை அணு நிறை என அழைக்கப்படுகிறது. சில தனிமங்களில் நியூட்ரான்களின் எண்ணிக்கை மாறுபட்டால், அணு நிறையும் மாறுபடும். அவற்றை ஐசோடோப்புகள் என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
இந்த ஐசோடோப்பு பகுப்பாய்வு முறையில், பூமியில் உள்ள துகள்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்த துகள்களின் அளவு 2 சதவீதத்திற்கு குறைவாகவே இருந்தன. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள அனைத்து தனிமங்களும் சூரிய குடும்பத்தின் மையப்பகுதியில் இருந்தே உருவாகி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
பூமியில் நீர் இருந்தது
பூமி முற்றிலும் கார்பன் துகள்கள் இல்லாமல் உருவானதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பூமி தனக்கு அருகில் உள்ள கோள்களில் இருந்து பெறப்பட்ட பொருட்களில் இருந்து வளர்ந்துள்ளது என்றும், சூரிய குடும்பத்தின் மையப்பகுதியில் ஏற்கெனவே நீர் இருந்துள்ளது என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜூபிடரின் பங்கு
சூரிய குடும்பத்தை இரண்டாக பிரிப்பதில் ஜூபிடர் கோள் முக்கிய பங்கு வகிக்கிறது. உருவத்தால் பெரிதாக இருக்கும் ஜூபிடர் தனது ஈர்ப்பு சக்தியால் வெளியில் இருந்து வரும் பொருட்களை கிரகித்துக் கொள்வதால், சூரிய குடும்பத்தின் மையப்பகுதியில் அவை கலப்பதில்லை. இதனால் ஜூபிடருக்கு வெளியே உள்ள கோள்களில் உள்ள பொருள்களுக்கும், ஜூபிடருக்கு உள்ளே உள்ள கோள்களில் உள்ள பொருள்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது.

