ETV Bharat / technology

ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோட் தொழில்நுட்பம்; சென்னை என்.ஐ.ஓ.டி பயிலரங்கத்தில் 300 பேர் பங்கேற்பு

சென்னை என்.ஐ.ஓ.டி-யில் ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோட் தொழில்நுட்பம் குறித்த பயிலரங்கம் நடைபெறுகிறது.

தேசிய நீருக்கடியில் ரோபோட்டிக்ஸ் பயிலரங்கம்
தேசிய நீருக்கடியில் ரோபோட்டிக்ஸ் பயிலரங்கம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2026 at 8:40 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: சென்னை என்.ஐ.ஓ.டி-யில் நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 300 பேர் பங்கேற்றுள்ளனர்.

பூமியின் மேற்பரப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியை பெருங்கடல்களே கொண்டுள்ளன. அவை உயிரினங்களை நிலைநிறுத்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனை உணர்ந்து, இந்தியா கடல் கண்காணிப்பு, ஆழ்கடல் ஆய்வு, நீருக்கடியில் போக்குவரத்து, வள மதிப்பீடு மற்றும் நிலையான நீலப் பொருளாதார முயற்சிகளுக்காக உள்நாட்டு நீர்மூழ்கித் தொழில்நுட்பங்களை இந்தியா தீவிரமாக மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கடந்த இருபது ஆண்டுகளாக அதிநவீன நீருக்கடி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான என்.ஐ.ஓ.டி, சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ளது.

இங்கு ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆதரவோடு நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான பயிலரங்கம் (UWR-2026) நடைபெறுகிறது. அதன்படி, இன்று நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கப்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு கோரி திமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு

இந்த பயிலரங்கத்தில் கடல்சார் தொழில்நுட்பங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக்ஸ் துறையில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் துறை வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் என நாடு முழுவதிலும் இருந்து சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், எதிர்காலச் சவால்கள் மற்றும் கூட்டுப் பாதைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த பயிலரகத்தின் முக்கிய அம்சங்களாக நீருக்கடியில் இயங்கும் ரோபோ அமைப்புகளின் நேரடிச் செயல் விளக்கங்கள், மாணவர்களுக்கான சுவரொட்டி விளக்கக் காட்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்பயிலரங்கம் கடல்சார் ரோபோட்டிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தேசியத் தளமாக அமையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.