மோட்டோ எட்ஜ் 70-இன் சிறப்பான சம்பவம்: மொத்த ஆப்ஷனும் இத்துனூண்டு ஸ்லிம் போன்லயா! எப்படி பா?
மோட்டோ எட்ஜ் 70 போனின் அமோலெட் திரை பஞ்ச் ஹோலில், 4k தரத்தில் நொடிக்கு 30 பிரேம்களை ஈர்க்கும் 50 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.


Published : December 15, 2025 at 1:29 PM IST
ஹைதராபாத்: நடுத்தர வகையில், மிகவும் மெல்லிய போனாக மோட்டோ எட்ஜ் 70-ஐ இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் களமிறக்கியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் 10 அன்று, எட்ஜ் 60 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்த மோட்டோரோலா நிறுவனம், அதே வேகத்தில் ஆண்டின் இறுதியில் மோட்டோ எட்ஜ் 70 (Moto Edge 70) மாடலை மிகவும் மெல்லிய ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது. பழைய மாடல் 7.99 மில்லிமீட்டர் (மி.மீ) தடிமனாக இருந்த நிலையில், ஒரே வெட்டாக அதனை சுருக்கி எட்ஜ் 70 போனின் தடிமனை 5.99 மி.மீ ஆக நிறுவனம் குறைத்துள்ளது.
இவை மட்டுமின்றி, 446ppi திரை அடர்த்தி, மெல்லிய போனாக இருந்தாலும் பெரிய 5,000mAh பேட்டரி, ராணுவத் தர பாதுகாப்பு சான்று, மூன்று 50 மெகாபிக்சல் பின்பக்க கேமராக்கள், வயர்லெஸ் சார்ஜிங், வைஃபை 6இ, 68 வாட்ஸ் டர்போ சார்ஜிங் எனப் பயனர்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளன.
மோட்டோ எட்ஜ் 70 அம்சங்கள் என்ன?
விமானத் தர அலுமினிய உலோகத்தால் கட்டமைக்கப்பட்ட மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில், பெரிய 6.7 அங்குல, 2712x1220 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எக்ஸ்டிரீம் அமோலெட் திரை வழங்கப்பட்டுள்ளது. இதில் எச்டிஆர்10+, 120Hz ரெப்ரெஷ் ரேட், 100% டிசிஐ-பி3 நிற அமைப்பு, 4,500 பீக் பிரைட்னஸ், நீருக்கடியிலும் பயன்படுத்தும் வகையிலான வாட்டர் டச் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன.

வெறும், 159 கிராம் எடையைக் கொண்ட மோட்டோ எட்ஜ் 70 போனிற்கு, ஐபி68, ஐபி69 பாதுகாப்பும், MIL-STD 810H ராணுவத் தர பாதுகாப்புத் தரக் குறியீடும் வழங்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எட்ஜ் 70 ஸ்மார்ட்போனில், 8ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5X) எனும் மேம்பட்ட ரேம் மெமரியும், 256ஜிபி யு-எம்சிபி (uMCP) எனும் புதிய தலைமுறை ஸ்டோரேஜ் மெமரியும் நிறுவப்பட்டுள்ளன.
மூன்று பின்பக்க கேமரா அமைப்புகளுடன் சந்தையில் கால்பதித்திருக்கும் எட்ஜ் 70 போனில், f/1.8 அபெர்சர் உடன் வரும் 2.0 பிக்சல் அளவு கொண்ட 50 மெகாபிக்சல் கேமராவும், 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்சும், ஒரு பிரத்யேக 3-இன்-1 லைட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளன. முன்பக்கம், 4k தரத்தில் நொடிக்கு 30 பிரேம்களை (30fps) ஈர்க்கும் 50 மெகாபிக்சல் கேமராவும் திரையின் பஞ்ச் ஹோலில் இணைக்கப்பட்டுள்ளது.

பெரிய கிராஃபிக்ஸ் அடங்கிய கேம்களுக்கு பக்குவமில்லாத ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் இதில் நிறுவப்பட்டிருந்தாலும், சாதாராண கேம்கள் உள்பட தினசரி ஒரு மனிதனுக்கு மொபைலில் தேவையான அனைத்து வேலைகளையும் நிறைவாக பூர்த்து செய்யும் திறன் பெற்றதாக இந்த சிப்செட் இருக்கும் என்று குவால்காம் தெரிவித்துள்ளது.
வெறும் 5.99 மி.மீ என போனின் தடிமன் இருந்தாலும், லித்தியம் ஐயன் பேட்டரிக்கு பதிலாக, லித்தியம் சிலிக்கான் கார்பன் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோட்டோரோலா நிறுவனம் 5,000mAh திறனை பயனர்களுக்கு உறுதி செய்துள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் டர்போ சார்ஜிங்கும், 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. முறையே, சார்ஜரையும் நிறுவனம் போனுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும், இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் ஒலி அமைப்பு, ப்ளுடூத் 5.4, என்.எஃப்.சி, வைஃபை 6இ போன்ற மேம்பட்ட இணைப்பு ஆதரவுகளுடன், புராஸிமிட்டி சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செலெரோமீட்டர், கைரோஸ்கோப், சார் சென்சார், சென்சார் ஹப், மேக்னெட்டோமீட்டர் ஆகிய சென்சார்களையும் மோட்டோ எட்ஜ் 70 கொண்டுள்ளது.
மோட்டோ எட்ஜ் 70 வகைகளின் விலை விவரம்
மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போன், பேன்டோன் கேட்ஜெட் கிரே, பேன்டோன் லில்லி பேட், பேன்டோன் புரான்ஸ் கிரீன் ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் எனும் ஒரு வகையில் மட்டுமே நிறுவனம் புதிய மோட்டோ எட்ஜ் 70 போனை அறிமுகம் செய்துள்ளது.
| இதையும் படிஙக்: மாருதி சுசூகியின் முதல் மின்சார கார்: ‘இது வேற மாரி’ புதிய இ-விடாராவை காட்சிப்படுத்திய நிறுவனம்! |
மோட்டோ எட்ஜ் 70 போனின் அசல் விலை ரூ.34,999 எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில், அதன் தற்போதைய சலுகை விலை ரூ.29,999 ஆக விற்பனை செய்யப்படும் என மோட்டோரோலா நிறுவனம் தன் வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதனை ரூ.28,999 என்ற விலையில் வங்கி சலுகைகளுடன் வாங்கலாம் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் புதிய மோட்டோ எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனைக் கொண்டுவரப்படுகிறது.

