ETV Bharat / technology

டீப்ஃபேக்கை தவறாக பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை - இந்தியா ஏஐ இயக்குநர் முகமது சபீருல்லா எச்சரிக்கை

முதல் முறையாக, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 15 முதல் 20-ஆம் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஏஐ இம்பேக்ட் நிகழ்வில் ஏஐ இந்தியா இயக்குநர் முகமது சபீருல்லா
ஏஐ இம்பேக்ட் நிகழ்வில் ஏஐ இந்தியா இயக்குநர் முகமது சபீருல்லா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 12, 2025 at 11:26 AM IST

2 Min Read
Choose ETV Bharat

- By எஸ்.ரவிச்சந்திரன்

சென்னை: டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் முகத்தை வைத்து போலியான வீடியோக்கள் தயாரித்தால் அதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் உள்ளன என்று இந்தியா ஏஐ திட்டத்தின் இயக்குநர் முகமது சபீருல்லா எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு எதிர்வரும் 2026 பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாகவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலும் சென்னை ஐஐடி வளாகத்தில் 2 நாட்கள் ஏஐ மாநாடு நடைபெற்றது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘இந்தியா ஏஐ மிஷன்’ மற்றும் சென்னை ஐஐடி-யின் செயற்கை நுண்ணறிவு மையம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தியது. இதில், இந்தியா ஏஐ-யின் இயக்குநர் முகமது சபீருல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஏஐ இம்பேக்ட் நிகழ்வில் ஏஐ இந்தியா இயக்குநர் முகமது சபீருல்லா
ஏஐ இம்பேக்ட் நிகழ்வில் ஏஐ இந்தியா இயக்குநர் முகமது சபீருல்லா (ETV Bharat Tamil Nadu)

முதல் முறையாக, இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த உச்சி மாநாடு 2026 பிப்ரவரி 15 முதல் 20-ஆம் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், உலகிலேயே முதல்முறையாக 2023-இல் இந்த மாநாடு இங்கிலாந்தில் நடைபெற்றதாகக் கூறினார்.

இந்த மாநாடு 7 முக்கியப் புள்ளிகளை கருபொருளாகக் கொண்டு நடத்தப்படுகிறது என முகமது சபீருல்லா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் விவரித்தார். அதன்படி,

பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ (Safe and Trusted AI),

ஏஐ வளங்களை ஜனநாயகமாயக்குதல் (Democratizing AI Resources),

மீள்தன்மை புதுமை செயல்திறன் அறிவியல் (Resilience, Innovation, and Efficiency),

அறிவியல் (Science),

மனித மூலதனம் (Human Capital),

சமூகத்திற்கு அதிகாரமளித்தல் (Inclusion for Social Empowerment), பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நன்மைக்கான ஏஐ (AI for Economic Growth and Social Good)

போன்றவை அடங்கி இருக்கிறது. இதில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை என்பது மிகவும் முக்கியமானது என சபீருல்லா குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நவம்பர் மாதம் ஏஐ தொழில்நுட்பத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. புதிய தொழில்நுட்ப முறைகளை வரும் போது, அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் பயன்படுத்துபவர்களின் மனதில் இருக்கும்.

ஏஐ இந்தியா இயக்குநர் முகமது சபீருல்லா பேட்டி அளித்தார் (ETV Bharat Tamil Nadu)

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு (DPDP) சட்டம், 2023 ல் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் உள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பத்தன்மையை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அது சார்ந்த தொழில்நுட்பங்களையும் உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு தனியாக சட்டம் வேண்டாம் என்பது தான் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சட்டங்களே, அதனை பாதுகாக்கும் வகையில் உள்ளது. அதில் ஏதாவது தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது.

டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (Deepfake technology) ஒருவர் கூறியதை திரித்து கூறவோ, சொல்லாததை கூறியது போல் எடிட் செய்து வீடியோ தயார் செய்தாலோ, அதை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிமுறைகள் உள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு இந்தியா ஏஐ மிஷன் உதவிகரமாக இருந்து வருகிறது. . டீப்பேக் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவதற்கு (Deepfake technology) பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, ஏஐ பாதுகாப்பு நிறுவனம் தொடங்கவும் திட்டமிட்டு வருகிறோம். பாதுகாப்பு வந்தால் தான் நம்பகத்தன்மையும் வரும். அப்போது தான் ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் மக்களிடம் பயன்பாட்டிற்கு வரும்.

இப்போது, ஏஐ சார்ந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தாலும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்ய வேண்டி உள்ளது. எல்லா ஆராய்ச்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என்பதில்லை. புதிய தொழில் நுட்பம் என்பதால் தோல்வியும் இருக்கும்.

ஏஐ தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகளில் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது,” என்றார்.

டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து அரசுத்துறை தலைவர்களும், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன உயர் அலுவலர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.