சமூக வலைத்தளங்கள் கண்காணிப்பு: பயனர்களின் தனியுரிமையை பறிப்பதாக ‘இன்டர்நெட் ஃப்ரீடம்’ கண்டனம்
அமைச்சகம் வெளியிடும் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புதிய சட்டவரைவு முன்மொழியப்பட்டுள்ளது.


Published : March 31, 2026 at 1:08 PM IST
புதுடெல்லி: தனிநபர்களின் சமூக வலைத்தள பதிவுகளை நேரடியாக அணுகி, அவற்றில் பிரச்சனை இருக்கும் என அரசு கருதினால், குறிப்பிட்ட பதிவை நீக்கும்படி பயனருக்கு அறிவிப்புகளை வழங்கும் புதிய நடைமுறையை அமல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இன் கீழ், ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே இவ்வாறு பதிவுகளை நீக்குவதற்கான அறிவிப்புகளை வழங்க முடியும். அதனால், இந்த சட்ட விதிகளின் புதிய வரைவை அமலுக்குக் கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
வரைவில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, மத்திய அரசு வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால், பயனர்கள் பதிவிடும் பதிவுகள் தொடர்பான வழக்குகளுக்கு, சம்பந்தப்பட்ட தளங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகும்.
அமைச்சகம் வெளியிடும் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேற்றைய தினம் (மார்ச் 30) தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பான இந்த வரைவுத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில், பயனர்களின் இணைய சுதந்திரத்திற்காக போராடி வரும் ‘இன்டர்நெட் ஃப்ரீடம்’ அமைப்பு, இந்த புதிய வரைவு விதிகள் தொடர்பாக பல கேள்விகளை முன்வைத்துள்ளது.
Sound the Alarm : IFF’s First Read on MeitY's Draft IT Rules Second Amendment, 2026
— Internet Freedom Foundation (IFF) (@internetfreedom) March 30, 2026
New Delhi, 30 March 2026
On 30 March 2026, the Ministry of Electronics and Information Technology published proposed amendments to the IT Rules, 2021, inviting public comments by 14 April, a… pic.twitter.com/NqT9dL4ppX
முக்கியமாக, பயனர்களுக்கு நேரடியாக அறிவிப்புகளை வழங்க வேண்டும் என்றால், அவர்களின் கணக்குகள் மீது அரசுக்கு நேரடி அணுகல் தேவைப்படும். அப்படி அணுகல் வழங்கப்படும் பட்சத்தில், பயனர்களின் தனியுரிமை தகவல்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறிவிடும் என்று ‘இன்டர்நெட் ஃப்ரீடம்’ எச்சரித்துள்ளது. எனவே, இந்த நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நேரத்தில், “இணைய சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனர்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான இணையத்தை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது,” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
| இதையும் படிங்க: சவரனுக்கு ரூ.800 குறைவு: இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? |
தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-இல் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவுத் திருத்தங்கள் குறித்து ஏப்ரல் 14, 2026-க்குள் ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 'மக்களின் தனியுரிமை தகவல்கள் மீது தொடுக்கப்படும் போர்' எனவும் எதிர்க்கட்சிகள் இதனை குறிப்பிடுகின்றன.

