ESCAPADE திட்டம்: ப்ளூ ஒரிஜின் உதவியுடன் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல புதிய தந்திரத்தை பயன்படுத்திய நாசா!
ESCAPADE சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து, செப்டம்பர் 2027 வாக்கில் செவ்வாய் கிரகத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது.

Published : November 14, 2025 at 8:45 PM IST
ஃபுளோரிடா: ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் பெரிய க்ளென் ராக்கெட் மூலம் நாசாவின் இரண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் 'ESCAPADE' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். சூரியன் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்த்தை எவ்வாறு அகற்றுகிறது என்பதை படிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகப் பார்க்கப்படுகிறது. நியூ க்ளெனின் ராக்கெட்டின் இரண்டாவது விண்வெளிப் பயணமாக இது பார்க்கப்படுகிறது.
சூரியனில் இருந்து வரும் துகள்களின் வேகம் செவ்வாய் கிரகத்தைத் தாக்கி அதன் வளிமண்டலத்தை மெதுவாக எவ்வாறு அகற்றுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக ESCAPADE செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டன. சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கும் தூசியை ஊதித்தள்ளுவது போன்று தான் இந்த ஆய்வும். அவ்வகையான மாற்றங்கள் விண்வெளியில் ஏற்படுவதை இந்த இரண்டு நாசா செயற்கைக்கோள்கள் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல், சூரியனின் சீற்றம் மில்லியன் ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் காற்றையும் நீரையும் பெருமளவில் நீக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் காந்த சூழல் சூரியக் காற்றிற்கு எவ்வாறு வினைபுரிகிறது, எதிர்கால விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் என்னென்ன நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் போன்றவற்றை 'ESCAPADE' ஆய்வு செய்கிறது. இந்த திட்டத்தை பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமை தாங்கி நடத்துகிறது.
ESCAPADE சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து, செப்டம்பர் 2027 வாக்கில் செவ்வாய் கிரகத்தை அடையும் என நாசா தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது, பூமியும் செவ்வாயும் சூரியனின் எதிர் பக்கங்களில் இருப்பதால் நேரடிப் பயணம் கடினமானதாகப் பார்க்கப்பட்டது.
எனவே, நாசா ஒரு சாதுரியமான பாதையை இந்த திட்டத்திற்காக வகுத்துள்ளது. செயற்கைக்கோள்கள் முதலில் பூமியிலிருந்து சுமார் ஒரு மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட் 2 எனப்படும் விண்வெளியில் ஒரு சிறப்பு இடத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த இடத்தை விண்வெளியில் ஒரு அமைதியான ‘பார்க்கிங் ஸ்பாட்’ ஆக நினைத்துக்கொள்ளுங்கள்.
அங்கிருந்து செயற்கைக்கோள்கள் ‘கடலில் சர்ஃபிங் செய்யும் நபர் அலைக்காக காத்திருப்பது போன்ற’ ஒரு ஈர்ப்பு விசைக்காக காத்திருக்கும். நவம்பர் 2026 வாக்கில் பூமிக்கு அருகே செவ்வாய் கிரகம் வரும்போது, ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி ‘ஸ்லிங்ஷாட்’ முறையில் செயற்கைக்கோள்கள் செவ்வாய் கிரகத்தை அடையும்.
ப்ளூ ஒரிஜினின் புதிய க்ளென் ராக்கெட் திட்டமிடப்பட்ட லோய்ட்டர் சுற்றுப்பாதையில் ESCAPADE-ஐ வெற்றிகரமாக கொண்டு சென்றது. ராக்கெட்டின் முதல் கட்டம் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஜாக்லின் என்ற கப்பலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. ப்ளூ ஒரிஜினின் நீண்டகால இலக்குகளில் நியூ க்ளென் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

