பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்: ஜனவரி 12-ல் அனுப்புகிறது இஸ்ரோ
ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 17 நிமிடங்களுக்குப் பிறகு, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் ஈஓஎஸ்-என்1 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும்.

Published : January 10, 2026 at 4:05 PM IST
சென்னை: பிஎஸ்எல்வி சி62 திட்டத்தின் ஒரு பகுதியாக ஈஓஎஸ்-என்1 (EOS-N1) எனப்படும் கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் திங்கட்கிழமை (ஜனவரி 12) விண்ணில் ஏவுகிறது.
இஸ்ரோவின் புதிய செயற்கைக்கோள் 14 ஆய்வுக் கருவிகளுடன் (Payloads) விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தில், பிற 14 துணை செயற்கைக்கோள்கள் அல்லது ஆய்வுக்கருவிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமானவை ஆகும்.
ஈஓஎஸ்-என்1 எப்போது ஏவப்படும்?
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விண்கலமும் செயற்கைக்கோள்களும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாகவும் ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிஎஸ்எல்வி சி62 திட்டம் ஜனவரி 12 அன்று காலை 10.17 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றும் இஸ்ரோ அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிஎஸ்எல்வி-யின் 64-வது பயணமாக அமையவிருக்கும் இந்தத் திட்டத்திற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் ஜனவரி 11 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், தாய்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 12 ஆம் தேதி காலை 10.17 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்ட பிறகு, இந்த முழுப் பயணமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 17 நிமிடங்களுக்குப் பிறகு, திட்டமிடப்பட்ட சூரிய இசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
PSLV-C62 / EOS-N1 Mission launch is scheduled on
— ISRO (@isro) January 9, 2026
🗓️ 12 Jan 2026 | ⏰ 10:17 IST
from the First Launch Pad (FLP), SDSC-SHAR, Sriharikota.
PSLV-C62 will carry EOS-N1 and 15 co-passenger satellites.
For more information Visit:https://t.co/3ijojDaYB2#PSLVC62 #EOSN1 #ISRO #NSIL
நான்காவது நிலையில் பிரியும் ஸ்பேனிஷ் விண்கலம்
இருப்பினும், ஸ்பேனிஷ் நிறுவனத்தின் Kestrel Initial Technology Demonstrator (KID Capsule) எனும் விண்கலம், ராக்கெட்டின் நான்காவது நிலையில் (PS4) தான் பிரியும் என்று கூறப்படுகிறது. இது ராக்கெட் ஏவப்பட்ட பின், 2 மணி நேரத்தில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ராக்கெட்டுகள் கிளம்பிய 20 நிமிடங்களில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திவிடும். ஆனால், இந்த திட்டத்தில் ராக்கெட்டின் கடைசிப் பகுதியான பிஎஸ்4 மற்றும் ஸ்பெயின் நாட்டு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் கிட் என்ற விண்கலம், ராக்கெட் கிளம்பிய 2 மணி நேரம் கழித்தே பிரியப்போகிறது.
ராக்கெட் அதன் வேலையை முடித்த பிறகு விண்வெளியில் குப்பையாக (Space Debris) மாறாமல் இருக்க இஸ்ரோ இந்த வித்தையை கையாள்கிறது. ராக்கெட்டின் 4-ஆவது நிலை இன்ஜினை விண்வெளியில் வைத்து மீண்டும் ஒருமுறை விஞ்ஞானிகள் இயக்குவார்கள்.
ராக்கெட்டின் வேகத்தைக் குறைத்து (De-boost), அதைத் பூமியின் வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவதற்காக இந்த செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
| இதையும் படிங்க: பீரங்கி குண்டுகளுக்கு ரேம்ஜெட் தொழில்நுட்பம்: 40-ல் இருந்து 70 கி.மீ ஆக அதிகரித்த வேகம் |
இந்த வேகக் குறைப்பிற்குப் பிறகுதான், ஸ்பெயின் நாட்டு விண்கலம் ராக்கெட்டிலிருந்து தனியாகப் பிரிக்கப்படும். இறுதியாக, ராக்கெட்டின் 4-ஆவது பகுதி மற்றும் அந்த விண்கலம் ஆகிய இரண்டும் பூமியின் காற்று மண்டலத்திற்குள் நுழையும். பின், எரிந்து முடிந்து மீதமுள்ள பகுதிகள் தெற்கு பசிபிக் பெருங்கடலில் (South Pacific Ocean) பாதுகாப்பாக விழும். இது ஸ்பிலாஷ்-டவுன் (Splashdown) என்று அழைக்கப்படுகிறது.
இதுவரை 60-க்கும் மேற்பட்ட முறை வெற்றிகரமாகப் விண்ணில் பறந்துள்ள பி.எஸ்.எல்.வி ராக்கெட், சந்திரயான்-1, மார்ஸ் மிஷன் போன்ற பெரிய சாதனைகளைச் செய்துள்ளது. அதே நம்பகத்தன்மையுடன் இப்போது இந்த சவாலான சாதனையை இஸ்ரோ முன்னெடுக்கிறது.

