ஸ்னாப்டிராகனை மிரட்டும் சாம்சங்கின் எக்சினோஸ் 2600: புதுமைகள் என்னென்ன?
புதிய சாம்சங் கேலக்சி எஸ்26 மற்றும் எஸ்26+ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எக்சினோஸ் 2600 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Published : March 2, 2026 at 5:40 PM IST
ஹைதராபாத்: சாம்சங் நிறுவனம் தனது மிகச்சிறந்த எக்சினோஸ் (Exynos) 2600 சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இது உலகின் முதல் 2nm (நானோமீட்டர்) GAA தொழில்நுட்பத்தில் உருவான சிப்செட் ஆகும். அதிக திறன் மற்றும் மற்றும் பேட்டரி சேமிப்பு என இரண்டிலும் இது குவால்காம் நிறுவனத்தின் ‘ஸ்னாப்டிராகன் 8 எலைட்’ சிப்பிற்கு நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ளது.
இந்த சிப்செட்டை கட்டமைக்க, ஆர்ம் சி1 அல்ட்ரா (Arm C1-Ultra) மற்றும் சி1-ப்ரோ (C1-Pro) ஆகிய அதிநவீன கோர்களை (Cores) சாம்சங் பயன்படுத்தி இருக்கிறது. முந்தைய சிப்களைப் போலல்லாமல், இதில் இருக்கும் மிகச்சிறிய கோர்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த சிபியு (CPU) வேகம் 39 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவிக்கிறது.
இது பெரிய செயலிகளையும், அதிக திறன் கொண்ட மொபைல் கேம்களையும் மிக எளிதாகக் கையாளும். அந்த வகையில், இந்த சிப்செட் புதிய சாம்சங் கேலக்சி எஸ்26 மற்றும் எஸ்26+ மாடல் போன்களில் வழங்கப்பட்டுள்ளது.
ஏன் இது சிறந்தது?
மொபைல் உலகில் முதன்முறையாக ஹீட் பாத் பிளாக் (Heat Path Block - HPB) தொழில்நுட்பத்தை சாம்சங் அறிமுகப்படுத்தியுள்ளது. இது போன் சூடாவதை 16 விழுக்காடு வரை குறைக்கிறது. அதிக நேரம் கேம் விளையாடினாலும் அல்லது வீடியோ எடிட் செய்தாலும் போன் சூடாகாது என்பது சாம்சங்கின் வாதமாக இருக்கிறது.
இதன் நியூரல் பிராசசிங் எஞ்சின் (NPU) முந்தைய மாடலை விட 113 விழுக்காடு அதிக வேகம் கொண்டது. மேலும், Xclipse 960 கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் (GPU) மூலம் கேமிங் அனுபவம் 3 மடங்கு மென்மையாக இருக்கும். இதில் உள்ள Ray Tracing வசதி கேம்களை நிஜ உலகக் காட்சிகள் போலக் காட்டும் என்று சாம்சங் கூறுகிறது.
கேமராவைப் பொருத்தவரை, எக்சினோஸ் 2600 சிப்செட், 320 மெகாபிக்சல் கேமரா வரை ஆதரவு வழங்குகிறது. இதன் விஸ்வல் பெர்செப்ஷன் சிஸ்டம் (Visual Perception System - VPS) தொழில்நுட்பம், மனிதர்கள் கண்சிமிட்டுவதைக் கூடத் துல்லியமாகக் கண்டறிந்து புகைப்படங்களை தெளிவாக எடுக்கும் வல்லமை கொண்டது. அதுமட்டுமில்லாமல், குறைந்த வெளிச்சத்தில் வீடியோ எடுக்கும்போது கூட, அதில் தெளிவான படங்களை உறுதிசெய்யும் அளவிற்கு எக்சினோஸ் 2600 ஆற்றல் மிகுந்ததாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
கேலக்சி ஏஐ-க்காகவே செதுக்கப்பட்ட எக்சினோஸ் 2600:
பொதுவாக பல செயற்கை நுண்ணறிவு வசதிகளுக்கு இன்டர்நெட் தேவைப்படும். ஆனால் எக்சினோஸ் 2600-இல் உள்ள ஆர்ம் வெர்ஷன் 9.3 கட்டமைப்பு மற்றும் எஸ்எம்இ2 தொழில்நுட்பம் ஆகியவை, போனுக்குள்ளேயே செயற்கை நுண்ணறிவு கணக்கீடுகளை மிக வேகமாகச் செய்ய அனுமதிக்கிறது. இதனால் நம் தரவுகள், போனுக்கு வெளியே மேகக்கணினி ஸ்டோரேஜுக்கு (Cloud Storage) செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இது நம் தரவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
மேலும், சாம்சங் முதன்முறையாக ExecuTorch வசதியை இதில் சேர்த்துள்ளது. இது மென்பொருள் உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) தங்களது செயற்கை நுண்ணறிவு மாடல்களை (PyTorch-based) மிக எளிதாக சாம்சங் போன்களில் இயங்க வைக்க உதவும். இதனால், எதிர்காலத்தில் இன்னும் பல புதிய ஏஐ செயலிகள் சாம்சங் போன்களுக்கு பிரத்யேகமாகக் கிடைக்கும்.
ஸ்னாப்டிராகனுக்குப் போட்டியாக மாறுவது எப்படி?
எக்சினோஸ் சிப்கள் பொதுவாக அதிக வெப்பமடைவதாக புகார்கள் எழுந்து வருகிறது. ஆனால் இம்முறை, சாம்சங் தனது சொந்த 2nm தொழில்நுட்பம் மற்றும் புதிய வெப்பத் தடுப்பு முறைகள் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துள்ளது.
இதனால், சாம்சங் கேலக்ஸி பயனர்களுக்குக் கூடுதல் வேகம், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் பாதுகாப்பான ஏஐ வசதிகள் உறுதி செய்துள்ளது. மொத்தத்தில், Exynos 2600 என்பது சாம்சங் போன்களை உலகத் தரத்திற்கு இணையாகவும், அதே சமயம் அதிக ஆற்றல் கொண்டதாகவும் மாற்றப்போகும் ஒரு ‘கேம் சேஞ்சர்’ ஆக பார்க்க முடிகிறது.

