ETV Bharat / technology

BaaS திட்டத்தின்கீழ் இ-காரை வாங்க போறீங்களா? இதோ இந்தியாவின் டாப் 5 மலிவான எலெக்ட்ரிக் கார்களின் பட்டியல்

BaaS திட்டத்தின் கீழ் புதிதாக எகெட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பல லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும்.

டாடா டியாகோ இவி
டாடா டியாகோ இவி (tata motors)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 3, 2026 at 9:04 AM IST

3 Min Read
Choose ETV Bharat

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசு தரப்பில் மானியம் உள்பட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவை சந்தையில் பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டே வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் 'பேட்டரி சேவை' (Battery as a Service) எனும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளன.

இந்த திட்டத்தின் வாயிலாக ஒரு வாடிக்கையாளர் மின்சார வாகனத்தை வாங்கும்போது பேட்டரிக்கான பணத்தை வழங்காமல், வாகனத்திற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதனால் பல லட்சம் ரூபாயை அந்த வாடிக்கையாளரால் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

அதேசமயம், பேட்டரிக்கான தொகையை பயன்பாட்டிற்கு ஏற்ப செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, அதற்கு வாடகை கட்டுவதைப் போல, ஒவ்வொரு கிலோமீட்டர் (கி.மீ) பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகைய சூப்பரான திட்டத்தின்கீழ் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து மலிவு விலை மின்சார கார் மாடல்களின் பட்டியலையே இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம்.

1. டாடா டியாகோ இவி

இந்தியாவில் விற்பனையாகி வரும் மிக மிக விலைக் குறைவான மின்சார கார் மாடலாகவும், நம்முடைய பட்டியலில் முதல் இடத்தையும் டாடா டியாகோ இவி பிடித்துள்ளது. இந்த கார் சந்தையில் ரூ. 6.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது. அதுவே, பேட்டரி சேவை திட்டத்தின்கீழ் இந்த காரை வாங்கும்போது ரூ. 4.69 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இது காரின் சந்தை விலையை விட ரூ. 2 லட்சத்துக்கும் குறைவாகும்.

இதையடுத்து பேட்டரிக்கான கட்டணமாக ஒவ்வொரு கி.மீ பயன்பாட்டுக்கும் ரூ. 2.6 செலுத்த வேண்டும். உதராணமாக, டாடாவின் இந்த மின்சார காரை பேட்டரி சேவை திட்டத்தின் கீழ் வாங்கிவிட்டு, அந்த ஒரு மாதத்தில் சுமார் 100 கி.மீ தூரம் வரை பயணம் செய்தீர்கள் என்றால், அம்மாதத்திற்கான பேட்டரிக்கான கட்டணமாக ரூ. 260 செலுத்த வேண்டியிருக்கும்.

இதுதவிர, பேட்டரியை ரீ-சார்ஜ் செய்வதற்கான கட்டணத்தையும் நாமே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் அனைத்து பேட்டரி சேவை திட்டங்களுக்கும் கடைபிடிக்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ், டியாகோ இவி-யில் 19.2 kWh மற்றும் 24 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. முறையே அவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 226 கிமீ, 285 கிமீ எனும் ரேஞ்சுகளை வழங்குகின்றன.

2. எம்ஜி கோமெட் இவி

இந்தியாவின் மிகவும் சிறிய மற்றும் மற்றுமொரு விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி உள்ளது. இந்த காரை பேட்டரி சேவை திட்டத்தின்கீழ் ரூ. 4.99 லட்சத்துக்கு எம்ஜி வழங்குகின்றது. பேட்டரியுடன் சேர்த்து வாங்கும் போது அதன் விலை ரூ. 7.79 லட்சமாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மேலும், பேட்டரி சேவைக்கான கட்டணமாக கி.மீட்டருக்கு ரூ. 3.20 வசூலிக்கப்படுகிறது. இந்த காரில் 17.4 kWh பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

3. டாடா பஞ்ச் இவி

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை மின்சார கார் மாடல்களின் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை டாடா பஞ்ச் இவி பிடித்துள்ளது. இந்த காரை பேட்டரியுடன் வாங்கும்போது அதன் விலை ரூ. 9.69 லட்சமாக உள்ளது. அதுவே பேட்டரி சேவை திட்டத்தின் வாங்கும்போது ரூ. 6.49 மட்டும் செலுத்தினால் போதும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மேலும், பேட்டரி சேவைக்கான கட்டணமாக கிமீட்டருக்கு ரூ. 2.60 செலுத்த வேண்டும். டாடா நிறுவனம் இந்த மலிவு விலை மின்சார காரில் 30 kWh மற்றும் 40 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதில் முதல் ஒன்று 365 கிமீ முதல் 375 கிமீ வரையிலும், இரண்டாவது ஒன்று 468 கிமீ வரையிலும் ரேஞ்ச் தரும்.

4. சிட்ரோன் இசி3எக்ஸ்

இந்தியாவில் பேட்டரி சேவை திட்டத்தின்கீழ் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார கார்களின் பட்டியலில் நான்காவது இடத்தை சிட்ரோன் இசி3எக்ஸ் பிடித்துள்ளது. இது பேட்டரி சேவை திட்டத்தின்கீழ் ரூ. 6.89 லட்சத்துக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.

மேலும், ஒரு கிமீ பயன்பாட்டிற்கான கட்டணமாக ரூ. 2.26 வசூலிக்கப்படுகிறது. இதுவே பேட்டரி சேவை அல்லாத நிலையில் இதன் விலை ரூ. 11.99 லட்சமாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் 29.2 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் ஓர் முழு சார்ஜில் 246 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

5. கியா சைரோஸ் இவி

நம்முடைய இந்த பட்டியலில் சற்றே காஸ்ட்லியான விலைக் கொண்ட மலிவு விலை மின்சார கார் மாடலாக கியா சைரோஸ் இவி உள்ளது. பேட்டரி சேவையின்கீழ் இந்த இ-கார் ரூ. 7.99 லட்சத்துக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், ஒரு கிமீட்டருக்கு ரூ. 3.3 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த காரை பொருத்த வரை 42 kWh மற்றும் 51.4 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இது முழு சார்ஜில் 526 கிமீ வரை ரேஞ்ச் தரும். இந்த காரை பேட்டரி சேவை திட்டம் அல்லாமல் வாங்கும்போது ரூ. 13.49 லட்சம் வரை நாம் செலிவட வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க
  1. ஸ்மார்ட்போன் விற்பனை சரிந்த போதிலும் குறையாத வருவாய்; வெளியான முக்கிய காரணம்
  2. லித்தியம் அயன் பேட்டரியை மறுசுழற்சி செய்யலனா இவ்ளோ பெரிய ஆபத்து ஏற்படுமா? எச்சரிக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் பேராசிரியர்
  3. 2028 முதல் ஏர் டாக்சியில் பயணிக்கலாம் - வடிவமைப்பை இறுதி செய்த 'இ பிளேன்' நிறுவனம்