சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கான புதிய கையேடு வெளியீடு
மொத்த வாகனங்களில் சரக்கு லாரிகள் 3 விழுக்காடு மட்டுமே உள்ள நிலையில், சாலைகளில் ஏற்படும் மாசு குறைபாட்டுக்கு அவைகளே முக்கிய காரணமாக உள்ளது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.

Published : February 26, 2026 at 6:51 PM IST
சென்னை: சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கான சென்னை ஐஐடியின் புதிய கொள்கை கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி பொறியியல் வடிவமைப்புத் துறையில் எரிசக்தி மற்றும் தொலைத்தொடர்பு உயர் சிறப்பு மையம் (Centre for Excellence in Energy and Telecommunications- CEET), சரக்கு வாகனங்களில் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வுக்கான உயர் சிறப்பு மையம் (Centre for Excellence for Zero Emission Trucking – CoEZET) உள்ளிட்டவைகளில் இந்த ஆய்வை மேற்கொண்டு வழிகாட்டியாக கையேட்டை தயாரித்துள்ளது.
‘பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்ஸ்’ மூலம் சேகரிக்கப்படும் பிரத்யேக சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகத் திறன் கொண்ட ZET சார்ஜ் பூங்காக்களில் ஒருங்கிணைக்க முடியும் என இவர்களின் ஆய்வு வழிகாட்டுகிறது. வழக்கமான கிரிட் மின்சாரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநரும், CEET தலைவருமான காமகோடி பேசுகையில், “நமது நாடு பூஜ்ஜிய உமிழ்வு சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு மாறும்போது, ZET சார்ஜ் மையங்கள் அவசியமாகிறது. CEET மற்றும் ஐஐடி CoEZET ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் கையேடு வெளியிட்டுள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் ஒருங்கிணைந்த ZET சார்ஜ் மையங்களை அமைப்பதற்கான தொழில்நுட்ப-பொருளாதார கட்டமைப்பையும் வணிக வழிமுறையையும் வழங்குகிறது,” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி COEZET முதன்மை ஆய்வாளர் சங்கர் ராம் பேசியபோது, “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தளவாடத் துறை அடித்தளமாக விளங்குகிறது. சாலைவழி சரக்கு வாகனப் போக்குவரத்து ஏறத்தாழ 65 விழுக்காடு விநியோகத்தை கையாள்கிறது. அந்த வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 5 சதவீதம் அளவுக்கு பங்களிப்பை வழங்குகிறது.
| இதையும் படிங்க: சாந்தமாக வந்து சாமியாடி சென்ற சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸ் - ஹைஃபை ஏஐ அம்சங்களுடன் புதிய மாடல்கள் அறிமுகம் |
மொத்த வாகனங்களில் சரக்கு லாரிகள் 3 விழுக்காடு மட்டுமே உள்ளது. ஆனால், இவை சாலைகளில் ஏற்படும் மாசுபாட்டுக்கு 53 விழுக்காடு காரணமாக அமைகின்றன. இதனை பூஜ்ஜிய-உமிழ்வு சரக்கு வாகனமாக மாற்றுவது காற்றின் தரம், பொது சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் பலன்களை அளிக்கும் என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

