வாட்ஸ்-ஆப் பயனர் பெயர் அம்சம் விவகாரம்: மத்திய அரசுக்கு நாளை பதில் அளிக்கிறது மெட்டா
அடையாள திருட்டு செய்யப்பட்டு ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி சம்பவங்கள் அரங்கேறிவிடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே மெட்டாவிடம் மத்திய அரசு தரப்பில் விரிவான விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.

Published : July 2, 2026 at 7:48 PM IST
புதுடெல்லி: வாட்ஸ்-ஆப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பயனர் பெயர் அம்சம் தொடர்பாக மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு மெட்டா நிறுவனம் நாளை பதில் அளிக்கவுள்ளது.
மெட்டா நிறுவனம், அதன் வாட்ஸ்-ஆப் செயலியில் 'பயனர் பெயர்' (User name) சேர்க்கும் அம்சத்தை அண்மையில் அறிமுகம் செய்தது. பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தொடர்பு எண்ணை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், இந்த அம்சம் ஆள் மாறாட்டம் மற்றும் மோசடிக்கு வித்திடும் என தொழில்நுட்ப வல்லுநர்களால் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், இதனை ஆய்வுக்கு உட்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும், இது தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறும் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனை முடியும் வரை பயனர் பெயர் அம்சத்தை வெளியிடக் கூடாது என்றும் மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியுரிமை குறித்த கவலைகள் எழுந்தநிலையில் இத்தகைய நடவடிக்கையை அரசு முன்னெடுத்துள்ளது.
யார் வேண்டுமானாலும், எந்த பெயரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்கிற நிலையிலேயே வாட்ஸ்-ஆப்பின் பயனர் பெயர் அம்சம் உள்ளது. இது, மோசடி நபர்கள் உண்மையான நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் பெயர்களைப் போன்று பயனர் பெயரை உருவாக்கி அதன் வாயிலாக மோசடி சம்பவங்களை நிகழ்த்தக் கூடும் என அதிகாரிகள் கவலை எழுப்பியுள்ளனர்.
இதே போன்று அடையாள திருட்டு செய்யப்பட்டு ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி சம்பவங்கள் அரங்கேறிவிடக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே மெட்டாவிடம் மத்திய அரசு தரப்பில் விரிவான விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், வாட்ஸ்-ஆப் பயனர் பெயர் அம்சத்தைப் பொருத்தவரை, ஓர் பயனர் ஒரு பயனர் பெயரை தேர்வு செய்துவிட்டால், அந்த பயனர் பெயரே வேறொரு நபரால் தேர்ந்தெடுக்க முடியாது. ஆகையால், அது முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும். உதாரணமாக @etv123 என ஒரு நபர் தேர்வு செய்துவிட்டால், இதே பெயரை வேறொரு நபரால் தேர்ந்தெடுக்கவோ அல்லது பயன்படுத்த முடியாது.
| இதையும் படிங்க: இன்ஸ்டா, பேஸ்புக் போல வாட்ஸ்-ஆப்பிலும் பயனர் பெயர் வசதி; புதிய அப்டேட்டால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி |
அத்துடன், மோசடி வேலைகள் மற்றும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் விதமாக மெட்டா நிறுவனம் கடுமையான விதிகளை பயனர் பெயர் திட்டத்தில் வகுத்திருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும், இந்த அம்சத்தை அடுத்து வரும் மாதங்களில் படிப்படியாக உலகம் முழுக்க பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த சூழலிலேயே, மத்திய அரசு தரப்பில் விரிவான விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. ஆகையால் விரைவில் மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கத்தை நாளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

