இனி தேடுவது சுலபம்: ‘டிஸ்கோ’ பயன்பாட்டை அறிமுகம் செய்த கூகுள்!
டிஸ்கவரி (கண்டுபிடித்தல்) என்பதையே கூகுள் ‘டிஸ்கோ’ என்று செல்லமாக பெயரிட்டுள்ளது.

Published : December 13, 2025 at 5:38 PM IST
ஹைதராபாத்: தேடலை எளிமையாக்க ’டிஸ்கோ’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனம், தங்களின் ‘கூகுள் சர்ச்’ என்ற இணைய உலாவி சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. சமீப காலங்களில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, தங்களின் சேவையை ஏஐ சார்ந்து கூகுள் விரிவுபடுத்தி வருகிறது.
அந்தவகையில், கூகுள் நிறுவனத்தின் உலாவி அல்லது வெப் பிரவுசரான குரோம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, அதனுடன் அவர்களின் ‘ஜெமினை ஏஐ’ திறன்களை நிறுவி, பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, ‘டிஸ்கோ’ எனும் சேவையை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், அதன் மூலமாக பிரவுசரில் இருந்து வெளியேறாமல், ஏஐ இணைப்புகளுடன் கொடுக்கும் தகவல்களை, பக்கத்திலேயே திறந்து பார்த்துவிட்டு, அது தொடர்பான சந்தேகங்களை எழுப்ப முடியும்.
டிஸ்கவரி (கண்டுபிடித்தல்) என்பதையே கூகுள் ‘டிஸ்கோ’ என்று செல்லமாக பெயரிட்டுள்ளது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், இதில் கூகுளின் மேப்ஸ், யூடியூப் போன்ற சேவைகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது தொடர்பான இணைப்புகளை இது வழங்கும். பக்கத்திலேயே அந்த இணைப்பை திறந்து படித்துவிட்டு, அதில் ஏற்படும் சந்தேகங்களை கேட்கலாம்.
இப்படி, நம் தேடல் தேவையை கூகுள் சுலபமாக்கி இருக்கிறது. ஒவ்வொரு தனிநபரின் தேவையை அறிந்து செயல்படும் இந்த டிஸ்கோ வெப் பிரவுசர் செயல்படும். கூகுள் குரோமை அடித்தளமாகக் கொண்டு கூகுள் புராஜெக்ட் லேப் ‘டிஸ்கோ’ தளத்தை உருவாக்கி இருக்கிறது.
டிஸ்கோ வெப் பிரவுசர் சிறப்புகள்
டிஸ்கோ தளத்தில் ‘ஜென் ஏஐ’ டேப்கள் மூலம் வெறும் தேடல்களை மட்டுமே பயனர்கள் மேற்கொள்ள முடியும் என்று கிடையாது. ஒரு சிறிய விளையாட்டு, சிறிய மென்பொருள் அல்லது மொபைல் ஆப்ஸை இந்த டிஸ்கோவில் உருவாக்க முடியும் என்கிறது கூகுள்.
| இதையும் படிங்க: டீப்ஃபேக்கை தவறாக பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை - இந்தியா ஏஐ இயக்குநர் முகமது சபீருல்லா எச்சரிக்கை |
நமக்குத் தேவையானவற்றை உள்ளீடு செய்து, அதனை வெளியிட்டு சோதனை செய்த பார்த்தபின், அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை நம்மால் செய்ய முடியும். பல மணிநேர வேலையை டிஸ்கோ சுலபமாக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சந்தையில், களமாடி வரும் காமட் பிரவுசருக்கு, ‘டிஸ்கோ’ நேரடி போட்டியாளராக இருக்கும்.

