வாட்ஸ்-அப்பை அடுத்து டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கு பறந்த நோட்டீஸ்
மோசடி மற்றும் ஆள்மாறாட்ட அபாயங்கள் தொடர்பான புகார்களை இந்த செயலிகள் எவ்வாறு கையாளுகின்றன என்கிற கேள்வியை நோட்டீஸ் வாயிலாக அமைச்சகம் எழுப்பியுள்ளது.


Published : July 3, 2026 at 5:00 PM IST
புது டெல்லி: வாட்ஸ்-அப்பை தொடர்ந்து டெலிகிராம், சிக்னல் ஆகிய செயலிகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மெட்டா (Meta) நிறுவனம், அதன் வாட்ஸ்-அப் (WhatsApp) செயலியில் புதிதாக 'பயனர் பெயர்' (User Name) சேர்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. தங்களின் தனிப்பட்ட எண்ணை பிறரிடம் பகிர விரும்பாதவர்கள் பயன்பெறும் விதமாக இந்த வசதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர மெட்டா நிறுவனம் தயாராகிக் கொண்டுள்ளது.
இந்த சூழலில் புதிய அம்சம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் முன்னரே, பயனர் பெயர் வசதி பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கக் கூடும் என கூறி மத்திய அரசு தரப்பில் மெட்டா நிறுவனத்துக்கு நேற்று (ஜூலை 02) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், பயனர் பெயர் அம்சம் தொடர்பாக மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 'டெலிகிராம்' (Telegram) மற்றும் 'சிக்னல்' (Signal) ஆகிய செயலிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செயலிகளில் ஏற்கனவே பயனர் பெயர் அம்சம் பயன்பாட்டில் உள்ளது.
இதையடுத்தே இந்த அம்சம் குறித்த கேள்விகளை நோட்டீஸ் வாயிலாக அரசு எழுப்பி உள்ளது. குறிப்பாக, மோசடி மற்றும் ஆள்மாறாட்ட அபாயங்கள் தொடர்பான புகார்களை இந்த செயலிகள் எவ்வாறு கையாளுகின்றன என்கிற கேள்வியையும் நோட்டீஸ் வாயிலாக அமைச்சகம் எழுப்பியுள்ளது.

பயனர் பெயர் அம்சம் இணையவழி மோசடி, டிஜிட்டல் கைது, ஆள்மாறாட்டம் மற்றும் அடையாள திருட்டு உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கும் என்கிற அச்சம் எழுந்த நிலையிலேயே இத்தகைய நடவடிக்கையில் மத்திய அரசு தற்போது களமிறங்கி உள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்-ஆப் பயனர் பெயர் அம்சம் விவகாரம்: மத்திய அரசுக்கு நாளை பதில் அளிக்கிறது மெட்டா
ஏற்கனவே, நீட் இளநிலை தேர்வின் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு, அந்த தடை சமீபத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த சூழலிலேயே அதன் பயனர் பெயர் அம்சத்தில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுதவிர, அறிவிப்பு வரும் வரை பயனர் பெயர் அம்சத்தை வாட்ஸ்-அப்பில் நடைமுறைப்படுத்த வேண்டாம் என மெட்டா நிறுவனத்திற்கு அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இணையவழி குற்ற நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதையடுத்து இந்த மாதிரியான நடவடிக்கையில் மத்திய அரசு சற்றே தீவிரம் காட்டி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

