ETV Bharat / technology

முதல் முறையாக நிறுவப்பட்ட இந்தியாவின் அவசரகால மின்சார மீட்பு அமைப்பு - ஏன் இது அவசியம்?

வெளிநாட்டு தயாரிப்பில் 200 கிலோவாக இருக்கும் நிலையில், உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட அவசர மின்சார மீட்பு அமைப்பில் பயன்படுத்தப்படும் ‘கிம்பல் பாய்ன்ட்’ இணைப்பு பொருளின் எடை 30 கிலோவாக இருக்கிறது.

அவசர மின்சார மீட்பு அமைப்பு விளக்கப்படம்
அவசர மின்சார மீட்பு அமைப்பு விளக்கப்படம் (CSIR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 9:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

-By எஸ். ரவிச்சந்திரன்

சென்னை: முற்றிலும் சென்னையில் உருவாக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர்- எஸ். இ.ஆர்.சி (CSIR-SERC) நிறுவனத்தின் அவசர மின்சார மீட்பு அமைப்பு (Emergency Retrieval System), ஜம்மூ காஷ்மீரில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் மின் கோபுரங்களில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக சீர் செய்ய உதவும், அவசர மின்சார மீட்பு அமைப்பை, சி.எஸ்.ஐ.ஆர் கீழ் இயங்கும், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (SERC) உள்நாட்டிலேயே நிறுவி காப்புரிமை பெற்றுள்ளது.

இது அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட அவசர மின்சார மீட்பு அமைப்பாகும். ஆனால், இங்கு தயாரிக்கப்பட்டுள்ள அவசர மின்சார மீட்பு அமைப்பு, விலை குறைவானதாகவும், எடை குறைவானதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறை

உயர் மின் அழுத்த கோபுரங்கள் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் போது, உடனடியாக மின்சார இணைப்பு வழங்குவதற்கு போர்கால அடிப்படையில் இந்த மின்சார அமைப்பு பயன்படுவதாகவும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்ட மின்சார அமைப்பை முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் தங்களிடம் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் நிறுவி உள்ளதாகவும், சென்னை சி.எஸ்.ஐ.ஆர்- எஸ். இ.ஆர்.சி இயக்குநர் ஆனந்தவல்லி நம்மிடம் தெரிவித்தார்.

அவசர மின்சார மீட்பு அமைப்பு
அவசர மின்சார மீட்பு அமைப்பு (CSIR)

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்கால அவசர மின்சார மீட்பு அமைப்பை உற்பத்தி செய்ய குஜராத்தில் உள்ள அத்வைத் (Advait Energy Transitions Limited) நிறுவனம் முதலில் உரிமம் பெற்றது. முறையே கடந்தாண்டு கொல்கத்தாவைச் சேர்ந்த ஹை-டெக் (Hi-Tech Systems and Services Ltd), ஐஏசி எலெக்ட்ரிக்கல்ஸ் (IAC Electricals Pvt. Ltd) ஆகிய இரண்டு நிறுவனங்களும் உரிமம் பெற்றுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் 2025 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பேரிடரின் போது சேதமடைந்த மின் கோபுரத்திற்கு மாற்றாக சிஎஸ்ஐஆர் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அவசர மீட்பு அமைப்பை கிஷன்பூர்-பாம்பூர் டிரான்ஸ்மிஷன் லைனின் (ஜம்மு) தாராட்-உதம்பூர் (Kishenpur-Pampore Transmission Line (Jammu) at the Tharad-Udhampur location) எனும் இடத்தில் அத்வைத் நிறுவனம் பொருத்தி உள்ளது.

இதன் மூலம் மின்சார நிறுவனத்திற்கு 60 கோடிக்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாகவும், மக்களுக்கு தடைபட்ட மின்சாரத்தை வேகமாக வழங்க முடிந்தது எனவும் ஆனந்தவல்லி குறிப்பிட்டார். மேலும், ஜம்மூ காஷ்மீரில் அவசர மின்சார மீட்பு அமைப்பை நிறுவுவதற்கு 18 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏன் இது அவசியம்?

மனித வாழ்வில் மிகவும் இன்றியமையதாக உள்ள மின்சாரம், மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் தொழில்நிறுவனங்களும் பெரும் இன்னல்களை சந்திக்கிறது. மின்சார உற்பத்தி நிலையத்தில் இருந்து கடைசிப் பகுதி வரையில் உயர் மின்னழுத்த கோபுரங்களை பயன்படுத்தி, 33 கிலோ வாட் முதல் 800 கிலோவாட் மின்சாரம் வரை கடத்தப்படுகிறது.

இந்த கோபுரங்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் உறுதியாக அமைக்கப்பட்டாலும், பேரிடர் காலங்களில் அவற்றில் சில சேதம் அடைகிறது. அதனை சரிசெய்து உடனடியாக மின்சார இணைப்புகளை வழங்குவதற்காக அமெரிக்கா, கனடாவில் இருந்து மின்சார இணைப்பு வழங்குவதற்கான கருவியை வாங்கி இந்தியா பயன்படுத்தி வந்தது.

சி.எஸ்.ஐ.ஆர்- எஸ். இ.ஆர்.சி நிறுவனத்தின் சென்னை இயக்குநர் ஆனந்தவல்லி பேட்டி அளித்தார். (ETV Bharat)

இந்நிலையில், சென்னையில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனம் அவசர மின்சார மீட்பு அமைப்பை உருவாக்கி, உற்பத்திக்காக அதன் தொழில்நுட்பத்தை மூன்று பெருநிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதாக ஈடிவி பாரத்திடம் பூரிப்புடன் ஆனந்தவல்லி தெரிவித்தார்.

இதன் செலவுகள் குறித்து விவரித்த சிஎஸ்ஐஆர் சென்னை அலுவலக இயக்குநர் ஆனந்தவல்லி, “ஒரு அமைப்பை உருவாக்கி நிறுவுவதற்கு சுமார் 18 கோடி ரூபாய் செலவாகும். இதை நாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய 60% கூடுதல் பணம் செலவாகும். அதாவது, வெளிநாட்டு அவசர மின்சார மீட்பு அமைப்பை பயன்படுத்தினால், சுமார் ரூ.45 கோடி வரை மின்சார வாரியம் செலவிட வேண்டும். மேலும், அதனை இந்தியா கொண்டு வருவதற்கான நடைமுறை சிக்கல்களும் அதிகளவில் உள்ளன,” என்று தெரிவித்தார்.

உள்நாட்டின் அவசர மின்சார மீட்பு அமைப்பின் சிறப்புகள்

அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் உருவாக்கப்படும் அமைப்புகளை விட, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட அவசர மின்சார மீட்பு அமைப்பின் ஏன் சிறந்தது என்பது குறித்தும் ஆனந்தவல்லி நம்மிடம் விளக்கினார். அப்போது, “உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட இந்த அமைப்பில் பயன்படுத்தப்படும் ‘கிம்பல் பாய்ன்ட்’ எனப்படும் முக்கிய இணைப்பு பொருளின் எடை 30 கிலோவாக இருக்கிறது.

இதை வெளிநாட்டு நிறுவனங்கள் சுமார் 200 கிலோ எடையுடன் தயாரிக்கின்றன. அந்த வகையில், மலைப் பிரதேசங்களில் ஏற்படும் சேதங்களின்போது, இலகுவாக நாம் தயாரித்த அமைப்பை எடுத்து செல்லமுடியும்,” என்று ஆனந்தவல்லி நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு இடத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டு, உயர் மின்னழுத்த கோபுரங்களில் சேதம் ஏற்பட்டால், அதனை புதிதாக நிறுவ சுமார் 2 முதல் 3 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். ஆனால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட தற்கால அவசர மின்சார மீட்பு அமைப்பினால், 3 நாள்களில் மின் சேவையை சீர் செய்துவிட முடியும்.

மேலும், மின் இணைப்புகளுக்கான தற்காலிக ஆதரவு கட்டமைப்பு அமைப்புக்கான காப்புரிமை இந்தியா, அமெரிக்கா மற்றும் கனடாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், ‘டூ பின் கிம்பல் ஜாயிண்ட்’ மீதான காப்புரிமை இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது எனவும் ஆனந்தவல்லி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ''இந்தியாவிலேயே 2 ஆவது சூப்பர் கம்ப்யூட்டர்'' - சென்னை ஐஐடி உருவாக்கி அசத்தல் சாதனை

அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட, அவசரகால மின்சார மீட்பு அமைப்பை உற்பத்தி செய்து தரும்படி, வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்திருப்பதாக தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்தவகையில், அமெரிக்கா, கனடா ஆகிய இருநாடுகள் மட்டுமே உற்பத்தி செய்து வந்த இந்த அவசரகால மின்சார மீட்பு அமைப்பை, இந்தியா முற்றிலும் புதுமையாக உருவாக்கி, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்து, உள்நாட்டு உற்பத்தித் திறனை உலகறிய செய்துள்ளது.