ஆர்டெமிஸ் 2 வெற்றி: நிலவில் இருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்
ஓரியன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, அதன் வேகம் மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் என்றளவில் இருந்துள்ளது.

Published : April 11, 2026 at 8:09 AM IST
ஹைதராபாத்: நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் நாசா திட்டத்தின் ஒரு பகுதியான Artemis II (ஆர்டெமிஸ் 2) குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சுமார் 54 ஆண்டுகள் கழித்து நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், முக்கியத் திட்டமாக பார்க்கப்பட்ட ஆர்டெமிஸ் 2 வாயிலாக, 4 பேர் அடங்கிய நாசா விண்வெளி வீரர்கள் குழு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவிற்கு பயணப்பட்டது.
Welcome home Reid, Victor, Christina, and Jeremy! 🫶
— NASA (@NASA) April 11, 2026
The Artemis II astronauts have splashed down at 8:07pm ET (0007 UTC April 11), bringing their historic 10-day mission around the Moon to an end. pic.twitter.com/1yjAgHEOYl
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (SLS) மூலமாக ஓரியன் விண்கலத்தில் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வுகளை முடித்தபின், 10 நாள்களுக்குப் பிறகு பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்கப் பயணத்தில், கிறிஸ்டினா கோக் என்ற விண்வெளி வீராங்கனை, ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கனடா நாட்டை சேர்ந்த ஜெரமி ஹேன்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி சுமார் 10 நாட்கள் பயணித்துள்ளனர்.
இதன் மூலம் மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து அதிகபட்ச தூரம் (சுமார் 4,00,000 கி.மீ க்கும் மேல்) சென்றவர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். (இதற்கு முன்பாக பல்வேறு மிஷன்களில் சென்ற விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்கினர். ஆனால், இந்த முறை தரையிறங்காமல் நிலவை சுற்றி வந்திருக்கின்றனர்)
விண்வெளி வீரர்கள் எப்படி தரையிறங்கினர்?
நாசா விண்வெளி வீரர்கள் சென்ற ஓரியன் விண்கலம், பூமியின் ஈர்ப்பு விசையை, ஒரு உந்துசக்தியை போல பயன்படுத்தி, குறைந்த எரிபொருளுடன் பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதை ஒரு கல்லை கவணில் வைத்து அடிக்கும் ‘ஸ்லிங்ஷாட்’ முறை என்றும் வர்ணிக்கலாம்.

ஓரியன் விண்கலம் பூமிக்கு அருகில் வந்ததும், விண்வெளி வீரர்கள் இருக்கும் ‘இன்டகிரிட்டி’ என்றழைக்கப்படும் விண்கலப் பகுதி, அதற்கு மின்சாரத்தையும், எரிபொருளையும் வழங்கி வந்த சர்வீஸ் மாட்யூல் (Service Module) பகுதியிலிருந்து வெற்றிகரமாக பிரிந்தது.
இதன்பிறகு, விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது. இது ஒலியை விட பல மடங்கு வேகமானதாகும். இந்த வேகத்தின் காரணமாக விண்கலத்தை சுற்றி சுமார் 2,700 செல்சியஸ் வெப்பம் உருவாகியுள்ளது.
Orion's main parachute has deployed. The spacecraft has a system of 11 chutes that will slow it down from around 300 mph to 20 mph for splashdown.
— NASA (@NASA) April 11, 2026
Get more updates on the Artemis II blog: https://t.co/7gicm7DWBt pic.twitter.com/ReXHTfkFld
இந்த கடுமையான வெப்பத்தில் இருந்து, விண்வெளி வீரர்கள் அணிந்திருக்கும் பிரத்யேக உடை அவர்களை பாதுகாத்துள்ளது. மேலும், இந்த கடும் வெப்பத்தால் சுமார் 6 நிமிடங்கள் வரை விண்கலத்திற்கும், விண்வெளி நிலையத்திற்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், பசிபிக் பெருங்கடலுக்கு அருகே விண்கலம் நெருங்கும் போது, மூன்று ராட்சத பாராசூட்டுகள் உதவியுடன் அதன் வேகம் 30 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. முடிவில், ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் 4 விண்வெளி வீரர்களை சுமந்திருந்த ஓரியன் விண்கலம் பத்திரமாக கடலில் விழுந்தது.
All four of the Artemis II astronauts have been successfully extracted from the Orion spacecraft following splashdown and are now on the USS John P. Murtha. Next up, they will be escorted to the medical bay where they will undergo post-mission medical evaluations. pic.twitter.com/v96RFKEUNN
— NASA (@NASA) April 11, 2026
பின்னர், அனைத்து வீரர்களையும் கப்பல் மூலம் மீட்ட நாசா குழு, அவர்களுக்கு உடல்நிலை மற்றும் உளவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனை அழைத்துச் சென்றது.
இதன் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ் 2 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை இறக்கி ஆய்வு செய்யும் பணிகளை ஆர்டெமிஸ் 3 திட்டத்தின் வாயிலாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா மேற்கொள்ளும்.

