'ஸ்மார்ட்போன் போல வாகனங்களுக்கும் சாப்ட்வேர் அப்டேட்...' தயாராகிறார்களா உற்பத்தியாளர்கள்?
இந்திய வாகன உற்பத்தி துறையில், மென்பொருள் மேம்படுத்துதலுக்கான முழுமையான நிலையை அடைய போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

Published : January 6, 2026 at 7:27 PM IST
|Updated : January 6, 2026 at 7:32 PM IST
- BY செ. சிவக்குமார்
''சாப்ட்வேர் யுகம், பாரம்பரிய மெக்கானிக்கல் திறன்களை முடிவுக்கு கொண்டு வராது. வாகனத்தின் பாதுகாப்பு, பழுதுபார்ப்பு, நம்பகத்தன்மை போன்ற அடிப்படை அம்சங்களுக்கு மெக்கானிக்கல் அறிவு எப்போதும் அவசியம். “ஸ்பேனர் + சாப்ட்வேர் ” என்ற இரண்டு உலகங்களிலும் ஒரு கலப்பு வளர்ச்சியாக இது அமையும். வாகனங்களில் மென்பொருட்களை மேம்படுத்துவதில் உற்பத்தியாளர்கள் தயாராகி வருகின்றனர்'' என கூறினார் பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் முனைவர் வளவன் அமுதன்.
தற்போது தயாரிக்கப்படும் வாகனங்களில், குறிப்பாக மின்சார வாகனங்களில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேளை மெக்கானிக்கல் கூறுகளின் முக்கியத்துவமும் நீர்த்து போகவில்லை. இருப்பினும், வாகனத்தின் பல செயல்பாடுகள் இன்று மென்பொருள் அடிப்படையிலான கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வாகன மென்பொருட்களின் தரம், பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு நடைமுறைகள் மிக முக்கியமானதாக மாறியுள்ளன. இந்தியாவில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரநிலைகள் AIS - Automotive Industry Standards போன்ற கட்டமைப்புகளின் மூலம் வரையறுக்கப்படுகின்றன. அவற்றை ARAI - Automatic Research Association of India என்ற அமைப்பு பரிசோதித்து சான்றளிக்கின்றன.

இந்த நிலையில், மென்பொருள் சார்ந்து இயங்கும் வாகனங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள்கள் அதிகரித்து வருகின்றன. இதனை சமாளிக்க, வாகனங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களை, ஸ்மார்ட்போன்களை போல தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் மேம்பாடுகளுக்காக Software Update Management System (SUMS) போன்ற நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உலக அளவில் ISO, UNECE போன்ற அமைப்புகள் வாகனங்களுக்காக வகுத்துள்ள தர நிலைகளுக்கு இணங்க, இந்தியாவும் தன்னுடைய வாகன மென்பொருள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு தரநிலைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு வரையறுக்கப்பட்ட தரநிலைகள் உலக தரத்திற்கு இணையாக உள்ளதா? இங்கு செயல்பாட்டில் உள்ள தரநிலைகள் கூறுவது என்ன? இது குறித்து, சென்னையை சேர்ந்த பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகன நிபுணர் முனைவர் வளவன் அமுதன் விவரித்துள்ளார். இது குறித்த ஈடிவி பாரத் தமிழ் ஊடகம் முன் வைத்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
(கேள்வி 1) AIS தரநிலைகள் எந்த வகையான பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பை வழங்குகின்றன? அவை உலக தரநிலைகளுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?
பதில்: AIS தரநிலைகள், வாகனங்களின் உடல் பாதுகாப்பை மட்டுமல்லாமல், டிஜிட்டல் மற்றும் சைபர் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன. AIS-189 (Cyber Security Management System – CSMS) வாகனங்களில் ஹேக்கிங், அனுமதியற்ற அணுகல், டேட்டா மாற்றம் போன்ற சைபர் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் முழுமையான கட்டமைப்பை வழங்குகிறது. இதனுடன், AIS-190 (Software Update Management System – SUMS) வாகனங்களில் நடைபெறும் software updates பாதுகாப்பானவையாக, மாற்றமில்லாதவையாக, சரிபார்க்கப்பட்டவையாக மற்றும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவையாக இருக்க வேண்டிய விதிகளை நிர்ணயிக்கிறது. இவ்விரு AIS தரநிலைகளும் UNECE R155 மற்றும் R156 போன்ற உலகத் தரநிலைகளுடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

(கேள்வி 2) வாகன மென்பொருள் மேம்படுத்துதல் (Vehicle Software Update) தவறானால் யார் பொறுப்பு? வாகன தயாரிப்பாளரா? அசல் உபகரண தயாரிப்பாளரா? வாகன டீலரா? அல்லது தேசிய, மாநில வாகன கட்டுப்பாடு ஆணையமா?
பதில்: ஒரு வாகன மென்பொருள் மேம்படுத்துதல் (Vehicle Software Update) தோல்வியுற்றால், சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைரீதியான இறுதியான பொறுப்பு வாகன தயாரிப்பாளருக்கே (OEM) உள்ளது. அசல் உபகரண தயாரிப்பாளர்கள் (OEM Suppliers) மென்பொருள் கூறுகளை உருவாக்கலாம். வாகன டீலர்கள் மேம்படுத்தல் செயல்முறையை நடைமுறைப்படுத்த உதவலாம். ஆனால், வாகன மென்பொருள் அப்டேட்டின் ஒருங்கிணைப்பு, பரிசோதனை, சரிபார்ப்பு, வெளியீடு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் வழங்குதல் ஆகிய அனைத்திற்கும் பொறுப்பு வாகன தயாரிப்பாளரிடமே உள்ளது. தேசிய மற்றும் மாநில வாகன கட்டுப்பாடு ஆணையங்கள் விதிமுறைகளை நிர்ணயிக்கும் மற்றும் கண்காணிக்கும் பொறுப்பில் மட்டுமே இருப்பதுடன், தனிப்பட்ட வாகன மென்பொருள் மேம்படுத்தல் தோல்விகளுக்கான நேரடி பொறுப்பாளர்களாக இல்லை.

(கேள்வி 3) வாகன மென்பொருள் மேம்படுத்துதலுக்கு (Vehicle Software Update) இந்திய வாகன உற்பத்தியாளர்கள் தயாராக இருக்கிறார்களா?
பதில்: இந்தியாவின் சில முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், உலக தரநிலைகளுக்கு ஏற்ப வாகன மென்பொருள் மேம்படுத்துதலுக்கான தயார் நிலையில் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். ஆனால் இந்த தயார் நிலையானது, நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தனித்த மென்பொருள் குழுக்கள், சைபர் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணப்படுத்தும் முறைகளை அமைத்துள்ளனர். இவை UNECE R155, R156 போன்ற உலகத் தரநிலைகளுடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பல இந்திய வாகன உற்பத்தியாளர்கள் இந்த அளவிலான டிஜிட்டல் மற்றும் ஒழுங்குமுறை மாற்றத்தை (Digital & Regulatory Transformation) இன்னும் கற்றுக் கொண்டு வருகின்றனர். முழுமையான தயார் நிலையை அடைய, இந்திய வாகனத் துறையின் தொடர்ச்சியான திறன் மேம்பாடு, தொழில்நுட்ப கருவிகள், உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் போதிய கால அவகாசம் ஆகியவை தேவைப்படுகிறது.
(கேள்வி 4) AIS-190 இந்தியாவில் எப்படி நடைமுறைக்கு வரும்?
பதில்: ஒரு தரநிலையை உருவாக்குவது எளிதாக இருந்தாலும், அதைச் சரியாக நடைமுறைப்படுத்தி பின்பற்ற வைத்தல் தான் பெரிய சவாலாகும். AIS 190 சிறப்பாக செயல்பட, வாகனத் தயாரிப்பாளர்களின் Software Update Management System (SUMS) முறையாக வடிவமைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும். AIS-190-ன் படி, ஒவ்வொரு software update-க்கும் தனிப்பட்ட ஒப்புதல் பெற வேண்டியதில்லை. ஆனால், வாகன தயாரிப்பாளர் உருவாக்கிய update நிர்வாக நடைமுறைகள், பரிசோதனை, சரிபார்ப்பு, வெளியீடு மற்றும் பதிவேடு பராமரிப்பு ஆகியவை ஒழுங்குமுறை அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதனுடன், காலாண்டு அல்லது சீரற்ற ஆடிட்கள், ஆவணச் சரிபார்ப்புகள் மற்றும் அப்டேட் பதிவுகளின் கண்காணிப்புகள் நடத்தப்பட வேண்டும். விதிகளை மீறும் வாகன நிறுவனங்களுக்கு தண்டனைகள் விதிக்கப்படாவிட்டால், AIS-190 நடைமுறைப் பலனின்றி பெயருக்கு மட்டும் இருக்கும் தரநிலையாக மாறும் அபாயம் உள்ளது.

(கேள்வி 5) வாகனங்களில் அப்டேட் பிழைகள் விபத்துகளாக மாறாமல் எப்படி தடுப்பது?
பதில்: சாப்ட்வேர் அப்டேட் வெளியிடுவதற்கு முன், முழுமையான சோதனை, உருவகப்படுத்துதல் (Simulation) மற்றும் பாதுகாப்பான “பின்னடைவு (Rollback) வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும். அப்டேட் செய்யப்பட்ட பிறகு, வாகனத்தின் ஆரம்ப செயல்பாடுகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். எந்த ஒரு சாப்ட்வேர் பகுதி தோல்வியுற்றாலும், வாகனத்தின் அடிப்படை பாதுகாப்பு செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில், fail-safe அல்லது fail-operational அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு என்பது ஒரு தொழில்நுட்பத் தேவையல்ல; ஒவ்வொரு சாப்ட்வேர் அப்டேட்டிலும் மதிக்கப்பட வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்பதை வாகன உற்பத்தியாளர்கள் உணர வேண்டும்.
(கேள்வி 6) வாடிக்கையாளர்கள் சாப்ட்வேர் அப்டேட் என்ன செய்கிறது என்பதை தெளிவாக அறிய முடியுமா?
பதில்: வாகன சாப்ட்வேர் அப்டேட்டின் விளக்கம் தெளிவாக வழங்கப்படுவது மிகவும் அவசியம். “மேம்பாடுகள் செய்யப்பட்டன” என்ற பொதுவான விளக்கம் போதாது. எந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன? என்ன மாற்றங்கள் சேர்க்கப்பட்டன? வாகனத்தின் செயல்திறன் அல்லது பாதுகாப்பு எவ்வாறு மேம்படுத்தப்பட்டது? என்பவை வாடிக்கையாளர்கள் புரியும் எளிய மொழியில் விளக்கப்பட வேண்டும். இதுவே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை உருவாக்கும் மற்றும் நீடிக்கச் செய்யும்.

(கேள்வி 7) Software Update செய்யும் போது 'ஹேக்கிங்' போன்ற சைபர் அச்சுறுத்தல்களை எப்படி தடுக்கலாம்?
பதில்: OTA சாப்ட்வேர் அப்டேட்களின் போது வலுவான சைபர் பாதுகாப்பு முக்கியமானது. குறியாக்கம் (Encryption), டிஜிட்டல் கையொப்பங்கள் (Digital Signatures), பாதுகாப்பான சர்வர்கள் (Secure Servers) மற்றும் அணுகல் கட்டுப்பாடு (Access Control) போன்ற நவீன பாதுகாப்பு முறைகள் கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும். அப்டேட் இன்ஸ்டால் செய்யும் முன், அதன் உண்மைத்தன்மை மற்றும் முழுமை வாகனத்தினாலேயே சரிபார்க்க வேண்டும். இதனுடன், தொடர்ச்சியான கண்காணிப்பு, அச்சுறுத்தல் கண்டறிதல் மற்றும் விரைவான பாதிப்பு மேலாண்மை நடைமுறைகளும் அவசியம்.

(கேள்வி 8) சாப்ட்வேர் யுகம், பாரம்பரிய மெக்கானிக்கல் திறன்களை முடிவுக்கு கொண்டு வருமா?
பதில்: இல்லை... SUMS பாரம்பரிய மெக்கானிக்கல் திறன்களை மாற்றுவதில்லை; அதற்குப் பிறகாக ஒரு புதிய நிபுணத்துவத்தை கூடுதலாகச் சேர்க்கிறது. வாகனத்தின் பாதுகாப்பு, பழுதுபார்ப்பு, நம்பகத்தன்மை போன்ற அடிப்படை அம்சங்களுக்கு மெக்கானிக்கல் அறிவு எப்போதும் அவசியம். ஆனால், மென்பொருள் சார்ந்த வாகனங்கள் அதிகரித்து வருவதால், சைபர் பாதுகாப்பு, சாப்ட்வேர் அப்டேட் மேலாண்மை போன்ற திறன்களைக் கொண்ட பொறியாளர்கள் சேர்க்கப்பட வேண்டிய நிலை உருவாகிறது. “ஸ்பேனர் + சாப்ட்வேர் ” என்ற இரண்டு உலகங்களிலும் ஒரு கலப்பு வளர்ச்சியாக இது அமையும்.'' என்றார்.

