ETV Bharat / technology

ஆந்திராவில் பிரம்மாண்டமாக உருவாகும் கூகுள் AI தரவு மையம்: அடிக்கல் நாட்டிய சந்திரபாபு நாயுடு

கூகுள் நிறுவனம் இந்த தரவு மையத்தை 15 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி) மதிப்பில் உருவாக்கவுள்ளது.

கட்டுமான தொடக்க விழாவில் சந்திரபாபு நாயுடு
கட்டுமான தொடக்க விழாவில் சந்திரபாபு நாயுடு (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 28, 2026 at 7:19 PM IST

2 Min Read
Choose ETV Bharat

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் அமையவுள்ள கூகுள் ஏஐ தரவு மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இன்றைய நவீன உலகின் அடுத்தகட்ட வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) இருந்து வருகிறது. மனிதனுக்கு சவால்விடும் வகையில் ஏஐ தொழில்நுட்பம் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவை சார்ந்தே இனி இருக்கும் என்பதை அறிந்த பல்வேறு நாடுகள் தங்களின் ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்த அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவும் ஏஐ மாநாடு என செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ தரவு மையம் அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர தொழில் துறை அமைச்சர் லோகேஷ் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, சீனிவாச வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கூகுள் கிளவுட் துணை தலைவர் விகாஸ் கோஹ்லி, அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் (SEZ) நிர்வாக இயக்குநர் கரண் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

15 பில்லியன் மதிப்பீட்டில் AI தரவு மையம்

கூகுள் நிறுவனம் இந்த தரவு மையத்தை 15 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.5 லட்சம் கோடி) மதிப்பில், ஒரு ஜிகாவாட் மின் உற்பத்தி திறனுடன் அமைக்கவுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, " கூகுள் தரவு தளம் விசாகப்பட்டினத்தில் அமைவதன் மூலம் ஆந்திரா ஒரு சர்வதேச தரவு நுழைவுவாயிலாக உருவெடுக்கும். இந்த விழாவை நான் ஒரு சடங்கு சார்ந்த ஒன்றாக மட்டுமே பார்க்கவில்லை. இது ஆந்திர மாநிலத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தின் அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்கான பணிகள் அனைத்தையும் துரிதமாக மேற்கொள்ள மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும். வரும் 2028 ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் இந்த தரவு மையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்து நிறைவு செய்யப்படும்" என்றார்.

மேலும் பேசிய அவர், "கூகுள் தரவு தள திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும்" எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் விசாகப்பட்டினம் ஒரு ஏஐ நகரமாக உருமாற தயாராக இருக்கிறது. குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த தரவு தளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

கூகுள் ஏஐ தரவு தளத்தின் சிறப்பு அம்சங்கள்

  • கூகுள் ஏஐ தரவு தளம் அமைப்பதற்கு ஆந்திர அரசு சுமார் 600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. விசாகப்பட்டினத்தை சுற்றி மூன்று இடங்களில் இந்த ஏஐ தரவு தளம் அமைக்கப்படவுள்ளது.
  • ஆசியாவில் வேறு எங்கும் இவ்வளவு பெரிய ஏஐ தரவு தளம் இல்லாத நிலையில், முதல் முறையாக ஆந்திராவில் அமைக்கப்படவுள்ளது.
  • இந்த தரவு தளம் அமைக்க கூகுள் நிறுவனம் 1.5 லட்சம் கோடி மூதலீடு செய்யவுள்ளது. இந்தியா இதுவரை ஈர்த்துள்ள அந்நிய நேரடி முதலீடுகளிலேயே இதுவே தனிப்பெரும் முதலீடாக கருதப்படுகிறது.
  • இந்த தரவு தளம் மூலம் நேரடியாக 1,88,000 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த தரவு தள உருவாக்கத்திற்கு சிவில் மற்றும் இயந்திர பொறியியல் துறையினர் என சுமார் 60 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.