ETV Bharat / state

பள்ளி வேனை தாக்கிய விவகாரம்; மாவுக்கட்டுடன் மன்னிப்பு கேட்ட கைதான இளைஞர்கள்!

இந்த சம்பவத்தில் ஏற்கெனவே ஒருவர் கைதான நிலையில், எஞ்சியிருந்த இரு இளைஞர்களையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஆகாஷ்,  கபிலன்
கைதான ஆகாஷ், கபிலன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 9, 2025 at 10:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மயிலாடுதுறை: பள்ளி மாணவர்கள் சென்ற வாகனத்தை தாக்கிய போதை இளைஞர்கள் கைதாகி மாவுக்கட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி மாலை பள்ளியில் இருந்து 25க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது.

அப்போது தரங்கம்பாடி அருகே அரசலங்குடி சாலை நடுவில் இருதரப்பினர் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது வாகன ஓட்டுநர் வழிவிடக்கோரி ஹாரன் அடித்த போது நிதானமின்றி, உச்சகட்ட மதுபோதையில் இருந்த இளைஞர்கள் 3 பேர் வேனை கல்லால் அடித்தும், கைகளால் கண்ணாடியை உடைத்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கைதான ஆகாஷ்
கைதான ஆகாஷ் (ETV Bharat Tamil Nadu)

இதனால் அச்சமடைந்து பள்ளி குழந்தைகள் அலறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளி வாகன ஓட்டுநர் ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

போலீஸ் விசாரணையில், பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (20), கபிலன் (20), பெருவேலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் ஆகிய 3 பேர் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. மூவர் மீதும் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாமரைச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாமரைச்செல்வன் மன்னிப்பு கேட்ட வீடியோவையும் காவல்துறையினர் வெளியிட்டனர்.

இதையும் படிங்க: ''பட்டப்பகலில் ரயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு'' - தட்டித் தூக்கியதும் கதறி அழுத இளைஞர்!

மேலும், தலைமறைவாக இருந்த ஆகாஷ் பூதலூர் காளியம்மன் கோவிலில் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அருகில் உள்ள வயலில் தப்பி ஓடிய ஆகாஷிடம் போலீசார் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், ஆகாஷ் தொடர்ந்து வேகமாக ஓடியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு வலது கையில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டது.

கைதான மூன்று இளைஞர்கள்
கைதான மூன்று இளைஞர்கள் (ETV Bharat Tamil Nadu)

காயம்பட்ட ஆகாஷ் உடனடியாக காவல்துறையினரால் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆகாஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் ஆகாஷிற்கு வலது கையில் சிகிச்சை செய்யப்பட்டு, மாவு கட்டு போடப்பட்டுள்ளது. மற்றொரு இளைஞர் கபிலனும் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், மாவு கட்டுடன் ஆகாஷ் கல்வீசி தாக்குதல் நடத்திய வேனில் பயணித்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசிய வீடியோவை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து ஆகாஷ், கபிலன் ஆகிய இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும், மீறி ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.