ETV Bharat / state

வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன் வர வேண்டும் - ஆளுநர் அர்லேகர்

தேசப்பற்றுக்கு துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. வைகையை மீட்பதும் தேசப்பற்று தான் என ஆளுநர் அர்லேகர் பேசினார்.

ஆளுநர் அர்லேகர்
ஆளுநர் அர்லேகர் (Sourashtra College YT)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 2, 2026 at 8:32 PM IST

3 Min Read
Choose ETV Bharat

மதுரை: வைகை ஆற்றை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இல்லையெனில், ஆளுநர் மாளிகை நடவடிக்கை எடுக்கும் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சௌராஷ்டிரா கல்லூரி மற்றும் சென்னை தென்னிந்திய ஆய்வு மையம் (Centre for South Indian Studies) இணைந்து நடத்தும் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் கட்டுரை மற்றும் குறும்படப் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில் வந்தேமாதரம், தொடர்ந்து தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்போது பேசிய அவர், “இந்த முறை என்னால் தமிழில் பேச முடியவில்லை. ஆனால், அடுத்தமுறை இங்கு வரும்போது தமிழில் பேசுவேன். ஏனென்றால் இப்போது தமிழ் எனது மொழியாகிவிட்டது. எனது மொழியை நான் தவிர்க்க முடியாது. ஹிந்தி உங்களுக்கு புரியாது என்பதால், ஆங்கிலத்தில் பேசுகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அனைவரும் நேதாஜியின் வாழ்க்கையை, இந்த தேசத்திற்கு அவர் செய்த சேவையை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மில் நிறைய பேருக்கு அவர் என்ன செய்துள்ளார் என்று தெரியாது. இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த நபர்களுள் நேதாஜியும் ஒருவர். அவர் என்ன செய்திருக்கிறார் என ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உடன் தமிழக ஆளுநர் அர்லேகர்
தமிழக ஆளுநர் அர்லேகருடன் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா (ETV Bharat Tamil Nadu)

பலருக்கும் நமது வரலாறு தெரியும் என்பதால், விவரமாகச் சொல்ல தேவையில்லை. ஆனால் நேதாஜியை போன்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் இப்போது இல்லை. அவர்கள் குறித்து நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். தேசப்பற்றுதான் நமக்கு தேவை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இங்கிருந்து கன்னியாகுமரி வரை ஒரே நாடு தான். நாம் எப்போது ஒற்றுமையாக உள்ளோமோ, அப்போது சிறந்த நாடாக இருப்போம். இளைஞர்களின் பலம் இக்காலத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு வரும் வழியில் என் உதவியாளர், வைகை ஆற்றை எனக்கு காட்டினார். ஆறு உள்ளது நீர் எங்கே? என பார்த்து வேதனைப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும்.

இதற்கு எதாவது செய்ய வேண்டுமென்று நான் அவரிடம் சொன்னேன். ஜார்கண்டில் நிரஞ்சனா என்ற ஒரு ஆறு இருந்தது. அதுவும் இதுபோலத் தான். அங்கு ஆளுநராக இருந்த போது அந்த ஆற்றை சுத்தம் செய்தோம். அதேபோல, வைகையையும் சுத்தம் செய்ய முடியும்.

மதுரையை சேர்ந்த இளைஞர்கள் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும். வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால் அந்த கரையில் நாகரிக வளர்ச்சி ஏற்படும். யாராவது அதற்கு முயற்சி எடுக்க வேண்டும், யாரும் முயற்சி எடுக்கவில்லை என்றால், ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும். தேசப்பற்றுக்கு துப்பாக்கி எடுத்து போருக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. இதுவும் தேசப்பற்று தான்.

வைகை மட்டுமல்ல இளைஞர்கள் சக்தியால் இன்னும் பல மாற்றங்களை கொண்டுவர முடியும். நேதாஜி இந்த தேசத்திற்காக உறுதிமொழி எடுத்ததைப்போல, நமது நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுப்போம்” எனக்கூறி உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: 'கிரீன் சிக்னல்' கொடுத்த சென்சார் போர்டு - விரைவில் திரைக்கு வரும் 'ஜனநாயகன்'

தொடர்ந்து ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் பேசுகையில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவத்திற்கு ஆள் சேர்த்த போது, தென்தமிழகத்திலிருந்து அதிகமாக சென்றதாக சொல்வார்கள். அது உண்மை தான். ராணுவத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு 5 வயதில் வந்தது. எனது அம்மாவின் ஆசையும் அதுதான். கஷ்டப்பட்டு 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன்.

எதையும் சண்டை போட்டு வாங்குவது நமது குணம். தீவிரவாத அமைப்புடன் நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி என்னை சுட்டார். உயிர் போகும் நிலைமையிலும், மைனஸ் குளிரிலும், எனது உயிரே போனாலும் அவர்கள் தப்பிக்கக் கூடாது என்னும் எண்ணம்தான் இருந்தது. நான் நினைத்திருந்தால் பின் வாங்கியிருக்கலாம். ஆனால், அவர்களை பின் வாங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. நேதாஜி வழியில் தான் நாங்களும், இந்தியாவும் செல்கிறது. நாட்டுக்காக உழைப்பவர்களை இந்த நாடு எப்போதும் மறக்காது” என்றார்.

நிகழ்ச்சியை முடித்துவிட்டு அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகைக்கு திரும்பிய ஆளுநர், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தார்.

அப்போது, வைகை ஆற்றை தூய்மையாக பராமரிக்கவும், அதன் அழகை பேணி பாதுகாக்கவும், அதன் வரலாறு தண்ணீர் வரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், இதனை ஆளுநர் மாளிகையே ஏற்று செயல்படுத்துவதற்கு, தேவையான நடவடிக்கைகளை ஆளுநர் அர்லேகர் எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.