ETV Bharat / state

இளம்பெண்ணை கொலை செய்தது ஏன்? - கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

கடந்த சில நாட்களுக்கு முன் வடலூர் அருகே இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மணல் குவியலுக்குள் பாதி புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2026 at 10:11 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கடலூர்: வடலூர் அருகே திருமணத்தை மீறிய உறவால் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடலூர் கண்ணுத்தோப்பு அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, முகம் சிதைந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் குவியலுக்குள் பாதி புதைந்த நிலையில கிடந்த சடலத்தை பார்த்து மக்கள் பீதியடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் வடலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் வடலூர் ஓ.பி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி மஞ்சுளா என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மஞ்சுளாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, அவர் நெய்வேலி அருகே உள்ள சேப்பளாநத்தம் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.

மேலும் சம்பத்குமாரின் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவே, தனிப்படை போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சம்பத்குமார் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். ஆனால், ஆதாரங்களை முன்வைத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், மஞ்சுளாவை தானே கொலை செய்ததாக சம்பத்குமார் ஒப்புக்கொண்டு, வாக்குமூலம் அளித்தார்.

அவரது வாக்குமூலத்தில், மஞ்சுளாவுக்கும், தனக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அவர் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள வறுபுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும், அவரது அடையாளம் தெரியக் கூடாது என மஞ்சுளாவின் முகத்தை சிதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர், சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலில் அவரது உடலை அரைகுறையாகப் புதைத்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராதவாறு அங்கிருந்து தப்பியோடியதாகவும் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சம்பத்குமார் மீது கொலை (IPC 302 /புதிய சட்டப்பிரிவு), சாட்சியங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசுகையில், "இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை அல்ல. இருசக்கர வாகனத்தில் வரும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதத்தின் விளைவாக, ஆத்திரத்தில் நடந்த சம்பவமாகவே முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தென்காசி, நெல்லை தாக்குதல் சம்பவம்: மேலும் ஒருவரை அதிரடியாக சுட்டுப் பிடித்த போலீஸ்

இருப்பினும், குற்றம்சாட்டப்பட்ட சம்பத்குமாரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார். இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, மணலில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.