ETV Bharat / state

தண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு

பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்று கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிட்லப்பாக்கம் காவல்நிலையம்
சிட்லப்பாக்கம் காவல்நிலையம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 1:41 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தாம்பரம் அருகே தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டுக்குள் புகுந்த கல்லூரி மாணவர், பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்றதுடன் அந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து, தானும் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சிட்லப்பாக்கம் சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சிவா (19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) பிற்பகல் இவர் தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த பெண்ணிடம் தனக்கு மயக்கம் வருவதாகவும், குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய உமா, இளைஞருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது, திடீரென அவர் மீது பாய்ந்த இளைஞர், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் கழுத்தில் பலத்த காயமடைந்த சிவாவையும் மீட்டு தாம்பரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையின்போது, சிவா மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டுள்ளார். அதனையடுத்து, இளைஞரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவாவுக்கு ஏற்கனவே மனநல பாதிப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பாக காயமடைந்த உமாவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செயின் பறிப்பதற்காகவே தண்ணீர் கேட்பது போல் நடித்து சிவா அங்கு சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி; போலீசார் தீவிர விசாரணை

தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெண்களை குறிவைத்து பட்டப்பகலிலும் இரவு நேரங்களிலும் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தனியாக செல்லும் பெண்கள், வீட்டு வாசலில் நிற்கும் பெண்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பெண்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றதுடன், அவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் போலீசார் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.