ETV Bharat / state

''இது நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்து'' - வீட்டு கதவில் எழுதியதால் பெண் விபரீத முடிவு; சிறுமிக்கு தீவிர சிகிச்சை

எழுத படிக்க தெரியாத பஞ்சம்மாள் தனது பேத்தி தருணிகாவின் உதவியுடன் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து தனது முடிவிற்கு யார் காரணம் என்பது குறித்து, வீட்டு சுவரில் எழுதி வைத்துள்ளார்.

வீட்டு கதவில் எழுதிய நிதி நிறுவனம்
வீட்டு கதவில் எழுதிய நிதி நிறுவனம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 8:22 PM IST

2 Min Read
Choose ETV Bharat

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் வீட்டு கதவில் ''இது நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்து'' என்று எழுதியதால் மனம் உடைந்த பெண் விபரீத முடிவு எடுத்தார். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வரதராஜபுரம் கிராமத்தில் ஒத்தவீடு பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் (37). இவர், கூலி வேலை செய்து வருகிறார்.‌ இவரது மனைவி சத்யா. தம்பதியின் மகள்கள் தருணிக்கா, லித்திகாஶ்ரீ. கேசவ பாண்டி என்ற மகனும் உள்ளார். ரஞ்சித்தின் தாய் பஞ்சம்மாள். இவர் மகனுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

ரஞ்சித் கடந்த 2024 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தனது பெயரில் உள்ள வீட்டை அடகு வைத்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொகையை செலுத்தி வந்த அவர் கடந்த சில மாதங்களாக குடும்ப சூழ்நிலையின் காரணமாக கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்ததாக தெரிகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் தவணைபணத்தை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளனர். நாளடைவில் நிதி நிறுவன பணியாளர்களின் நெருக்கடி அதிகரித்து, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ரஞ்சித் வீட்டிற்கு நேரில் வந்த பணியாளர்கள் தவணைத் தொகையை செலுத்தவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

பஞ்சம்மாள்
பஞ்சம்மாள் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் ரஞ்சித்தை செல்போனில் தொடர்பு கொண்ட நிதி நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் தெரிகிறது. இதற்கிடையில் அதே ஊரில் ரஞ்சித் தாய் பஞ்சமாளுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் நிதி நிறுவனம் சார்பில் நோட்டீஸ் ஒட்டியும், பெயிண்டால் இந்த சொத்து நிதி நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும் நிதி நிறுவன அதிகாரிகள் எழுதியுள்ளனர்.

இதில் மனமுடைந்த பஞ்சம்மாள் தனது மகன் ரஞ்சித் மனைவியுடன் வெளியே சென்று இருந்தபோது விஷம் குடித்துள்ளார். மேலும் விஷத்தை தன்னுடன் இருந்த பேத்தி தருணிகாவிற்கும் கொடுத்தாக கூறப்படுகிறது. முன்னதாக எழுதப் படிக்க தெரியாத பஞ்சம்மாள் தனது பேத்தி தருணிகாவின் உதவியுடன் குங்குமத்தை தண்ணீரில் கரைத்து தனது இந்த முடிவிற்கு யார் காரணம் என்பது குறித்து வீட்டு சுவரில் எழுதி வைத்துள்ளார்.

சில மணி நேரம் நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரஞ்சித், அம்மா மற்றும் தனது மகள் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

குங்குமத்தை கரைத்து எழுதப்பட்ட வாக்குமூலம்
குங்குமத்தை கரைத்து எழுதப்பட்ட வாக்குமூலம் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: ''ஆட்சி அதிகாரத்தில் அமமுக பங்கு பெறும்'' - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி தருணிகா தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ரஞ்சித் ராஜதானி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவன ஊழியர்களான மாயாண்டி, கண்ணன், கார்த்திக் சேது மற்றும் ஒரு ஊழியர் என மொத்தம் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல... வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை தொலைபேசி மூலமாக +91 44 2464 0050 +91 44 2464 0060, இமெயில் மூலமாக help@snehaindia.org தொடர்பு கொள்ளலாம். அல்லது டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.