ஊத்துக்கோட்டை: முகத்தில் ஆசிட் ஊற்றி பெண் கொலை - விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாள காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Published : August 28, 2026 at 1:52 PM IST
திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகில் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொட்டா ரெட்டிகுப்பம் பகுதியில், ஏரிக்கரை அருகே 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் முகத்தில் ஆசிட் ஊற்றி சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. அப்பகுதியில் இன்று காலை காலைக்கடன் கழிக்க சென்ற கிராம இளைஞர் ஒருவர் சடலத்தை பார்த்து, அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் அப்பகுதி மக்களுக்கு தெரிவித்த நிலையில், அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார், பெண்ணின் சடலைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக டி.எஸ்.பி வினோத் மற்றும் காவல் ஆய்வாளர் தேவராஜ் தலைமையிலான போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண் யார், அவரை கொலை செய்தது யார், கொலைக்கான காரணம் என்ன, கொலை செய்யப்பட்டது எப்படி என்பவை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு சுமார் 7.41 மணியளவில் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் பகுதியிலிருந்து வேறொரு தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வெள்ளாகுளம் என்ற பகுதியில், நேற்று இரவு மர்ம நபர்கள் பெண்ணை கொலை செய்து விட்டு உடலை அங்கு வீசிச் சென்றார்களா? அல்லது சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| இதையும் படிங்க: மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்து பெண் இறப்பிற்கு மின் கசிவு தான் காரணம் - உடற்கூராய்வு அறிக்கையில் தகவல் |
ஊத்துக்கோட்டை உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபரை நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெண் ஒருவர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் யார்?
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ஆந்திராவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் அருணா. வயது 45. இவரது கணவர் பெயர் மஞ்சுநாத நாயுடு. இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அருணா திருப்பதி மாவட்டம் சவரம்பாக்கத்தில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள பதட்டூர் என்னும் ஊருக்கு திருமணம் ஒன்று வந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அருணாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் பெங்களூருவில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

