ஹெல்மெட்டால் தாக்கியதில் பெண் உயிரிழப்பு? - காவல்துறையினர் தீவிர விசாரணை
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மஞ்சுளா உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Published : September 2, 2026 at 7:56 PM IST
சென்னை: சக குடியிருப்புவாசியால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பெண் திடீரென உயிரிழந்ததால், சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை மாவட்டம், நன்மங்கலம், பெருமாள்கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மஞ்சுளா (வயது 47). கடந்த ஆகஸ்ட் 21- ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மஞ்சுளா தனது குடும்பத்தினரின் துணிகளை கார் பார்க்கிங் பகுதியில் உள்ள கம்பியில் உலர வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே குடியிருப்பைச் சேர்ந்த விஜி (வயது 45) என்பவர் கம்பியில் உலர வைக்கப்பட்டிருந்த துணிகளை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் மஞ்சுளாவுக்கும், விஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த விஜி, தனது கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் மஞ்சுளாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மஞ்சுளாவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மஞ்சுளா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து, மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் மேடவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 25- ஆம் தேதி மஞ்சுளாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மஞ்சுளா, நேற்று முன்தினம் (ஆக.31) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த மேடவாக்கம் காவல்துறையினர், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று மஞ்சுளாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட இரத்தக் கசிவால் உயிரிழந்தாரா? அல்லது அவர் உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் நோய்த்தொற்று காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே அவர் எப்படி உயிரிழந்தார்? என்பது தெரிய வரும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

