விசிக தலைவர் திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு
தவெக கூட்டணி அரசில், விசிக அங்கம் வகிக்கும் சூழலில் திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு? விசிக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Published : August 29, 2026 at 5:08 PM IST
விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவனை தாக்க முயற்சி நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆண்டுதோறும் தனது பிறந்த நாளை (ஆகஸ்ட் 17) தொண்டர்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு அவர் தனது பிறந்த நாளை, 'தமிழ் தேசிய எழுச்சி மாநாடு' என்ற பெயரில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் கொண்டாடினார்.
இந்த மாநாட்டிற்காக உளுந்தூர்பேட்டையில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்படும் என்பதற்காக, உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
| இதையும் படிங்க.. பல்லாவரம் அருகே விசிக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது |
இந்த சூழலில்தான், விசிக மாநாட்டுப் பந்தலில் அந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தது. மாநாட்டு பந்தலில் ஆயிரக்கணக்கானோர் ஆங்காங்கே அமர்ந்திருந்தாலும், திருமாவளவன் மேடைக்கு வந்த சில நிமிடங்களில், சிலர் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர். அவர் பேசத் தொடங்கியதும், அவரை சுற்றிலும் கூட்டம் அலைமோதி, அவர் மீது மோதினர். ஒரு கட்டத்தில் சுற்றி இருப்பவர்களை திருமாவளவன் கடிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
கூட்ட நெரிசலால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் மயங்கு நிலைக்கு தள்ளப்பட்டதும், சூழலை உணர்ந்து அவர் தனது உரையை சுருக்கமாக முடித்து கொண்டு அங்கிருந்து வெளியேறினார். உடனிருந்தவர்கள், அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த தொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய பிறந்தநாள், சலசலப்புகளுடன் முடிந்ததால் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
மாநாடு முடிந்து நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில், மாநாட்டு மேடையில் ஏற்பட்ட நெரிசல் இயல்பாக நடந்த ஒன்று போலத் தெரியவில்லை என்றும், சமூக விரோதிகள் சிலரால் திட்டமிட்டுத் தூண்டிவிடப்பட்ட சதி போலத் தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத சில நபர்கள் திருமாவளவனை தாக்க முயன்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அப்புகாரில் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு, திருமாவளவனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் விசிக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நெரிசலுக்குப் பின்னணியில், சதித்திட்டம் இருப்பதாக காவல் துறையிடம் விசிகவினர் புகார் அளித்துள்ள விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
| இதையும் படிங்க.. தாயை விபத்துக்குள்ளாக்கிய நபரை போலீஸ் பிடிக்கவில்லை என்பதால் ஆத்திரம் - மருத்துவமனைக்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு |
இதற்கு முன்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அங்கு திருமாவளவனை தாக்க சதித் திட்டம் தீட்டியதாக 12 பேரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தின்போதும் திருமாவளவனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று விசிக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அதிமுக அரசும், அதற்கு பிறகு 2021-ல் ஆட்சிக்கு வந்தந திமுக அரசும் விசிக-வின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
ஆனால், இப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த சூழலில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு கட்சித் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

